search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஜாமீனில் வெளிவந்திருக்கும் நடிகர் திலீப்புக்கு கோர்ட்டு விதித்த நிபந்தனைகள்
    X

    ஜாமீனில் வெளிவந்திருக்கும் நடிகர் திலீப்புக்கு கோர்ட்டு விதித்த நிபந்தனைகள்

    நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி 85 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வெளிவந்திருக்கும் நடிகர் திலீப்புக்கு கோர்ட்டு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
    கேரளாவில் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி ஓடும் காரில் பிரபல நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் அந்த காட்சிகள் செல்போனிலும் படம் பிடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி பல்சர் சுனில் உள்பட அவரது கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ரவுடி பல்சர் சுனில் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கடத்தலின் பின்னணியில் இருந்து செயல்பட்டதாக பிரபல நடிகர் திலீப்பை கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி கைது செய்து ஆலுவா ஜெயிலில் போலீசார் அடைத்தனர்.

    அதன்பிறகு அங்கமாலி கோர்ட்டில் 2 முறையும், கேரள ஐகோர்ட்டில் 2 முறையும் நடிகர் திலீப் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

    அதை தொடர்ந்து மீண்டும் 5-வது முறையாக கேரள ஐகோர்ட்டில் திலீப் சார்பில் அவரது வக்கீல் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். திலீப் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் நெருங்கும் நிலையில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. மேலும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்யாததால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று திலீப்பின் வக்கீல் வாதாடினார்.

    அதேசமயம் போலீஸ் தரப்பில் வாதாடிய வக்கீல் திலீப்புக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று அவர் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி திலீப்புக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 85 நாட்களுக்கு பிறகு திலீப்பிற்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

    திலீப்புக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி பல்வேறு நிபந்தனைகளையும் விதித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை நடிகர் திலீப் அழிக்கக்கூடாது, மேலும் சாட்சிகளை கலைக்கவோ, மிரட்டவோ கூடாது. அவர் தனது பாஸ்போர்ட்டை உடனே ஒப்படைக்க வேண்டும். பத்திரிகை, டி.வி.களுக்கு அளிக்கும் பேட்டி உள்பட எந்த வகையிலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபரை அச்சுறுத்தவோ, ஆதிக்கம் செலுத்தவோ கூடாது.

    திலீப் ரூ.1 லட்சத்திற்கான பத்திரத்தை டெபாசிட் செய்ய வேண்டும். அதே தொகைக்கான மேலும் 2 உத்தரவாதங்களையும் அவர் அளிக்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரிகள் அழைக்கும் போதெல்லாம் அவர்கள் முன்பு திலீப் நேரில் ஆஜராக வேண்டும். போன்ற நிபந்தனைகளை நீதிபதி விதித்துள்ளார்.

    ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு நடிகர் திலீப் ஜெயிலில் இருந்து வெளியே வந்தார். அப்போது ஜெயில் வாசலில் கூடி இருந்த அவரது ரசிகர்கள் பலத்த ஆரவாரம் செய்து அவரை வரவேற்றனர். பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. சில ரசிகர்கள் திலீப்பின் படத்திற்கு பால் அபிஷேகம் செய்தனர். உடனே திலீப் தனது காரில் ஏறி நின்று ரசிகர்களை பார்த்து வணக்கம் கூறி அவர்களது வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

    அதன்பிறகு தனது தம்பி அனூப்புடன் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவரது கார் பரவூர் கவலாவில் உள்ள திலீப்பின் பூர்வீக வீட்டிற்கு சென்றது. அங்கு அவரது தாய் சரோஜம் திலீப்பை கண்ணீர்மல்க கட்டி அணைத்து வரவேற்றார். திலீப்பின் 2-வது மனைவி நடிகை காவ்யாமாதவன், மகள் மீனாட்சி மற்றும் நெருங்கிய உறவினர்கள் அவரை வரவேற்றனர்.
    Next Story
    ×