search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பா.ஜனதாவில் சேருவதற்கு ஏற்றவர் ரஜினி : கமல் பேட்டி
    X

    பா.ஜனதாவில் சேருவதற்கு ஏற்றவர் ரஜினி : கமல் பேட்டி

    நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதியாகி விட்டது. தனது கருத்துக்களை டுவிட்டர் மூலம் தெரிவித்து வந்த கமல், தற்போது தீவிரமாக அரசியலில் களம் இறங்குவது குறித்து பேட்டிகளிலும் தெரிவித்து வருகிறார்.
    டி.வி. ஒன்றுக்கு கமல்ஹாசன் அளித்த பேட்டியில் தனது அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    நான் தனிக்கட்சி தொடங்குவது குறித்து பல்வேறு தலைவர்களுடன், பெரியவர்களுடன், அறிவாளிகளுடன் ஆலோசனை கேட்டு வருகிறேன். நான் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன்.

    கெஜ்ரிவாலை சந்தித்தால் அவருடன் கூட்டணி என்று அர்த்தமில்லை. நான் போய் அவரை சந்திக்கவில்லை. அவர்தான் என்னை வந்து சந்தித்தார். நேரம் குறிப்பிட்டு கட்சி தொடங்க மாட்டேன். ஆனால் நிச்சயம் அரசியல் கட்சி தொடங்குவேன்.

    தமிழ்நாட்டில் திமு.க., அ.தி.மு.க. கட்சிகளின் ஊழல்களை மக்கள் பார்த்திருக்கிறார்கள். இந்த ஊழலுக்கு எதிராக தான் எனது போராட்டம் இருக்கும்.

    ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் பேசப்படுகிறது. தமிழ்நாட்டில் அது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு பயம் போய் விட்டது என்ற கோபம் மக்களிடம் இருக்கிறது. எனவே ஊழலுக்கு எதிராக மக்களுக்காக இதை செய்ய துணிந்திருக்கிறேன்.

    நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள். அவர் ஒரு பாதையில் செல்கிறார். நான் ஒரு பாதையில் செல்கிறேன். எங்கள் இருவரையும் ஒப்பிட்டு பேசுவது தவறு. நான் அரசியலில் இறங்கப் போகிறேன் என்று அவரிடம் தெரிவித்து விட்டேன்.

    ரஜினி ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர். பா.ஜனதாவுடன் கூட்டணி சேர அவர் ஏற்றவர். நான் பகுத்தறிவாதி. ஜாதிக்கு அப்பாற்பட்டவன். கம்யூனிசவாதியும் அல்ல. எந்த கட்சியுடனும் கூட்டணி சேர மாட்டேன்.

    எனக்கு என் நாடு மிகவும் பிடிக்கும். என் வீட்டில் இருந்தும், மாநிலத்தில் இருந்தும் என் நாடு தொடங்கும். வடஇந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் இடைவெளி இருக்கிறது. தமிழகம் பற்றி டெல்லிக்கு தெரியாது. டெல்லி பற்றி தமிழகத்துக்கு தெரியாது. அதனால்தான் தேசிய கட்சிகளால் இங்கு ஜெயிக்க முடியவில்லை.

    ஆளும் கட்சியில் பல குறைகள் இருந்தாலும், ஆரம்பத்தில் அதில் சில நல்ல விஷயங்களும் இருந்தன. அதில் உள்ள நல்லவற்றையும் எடுத்துக் கொண்டு செயல்படுவோம். நாங்கள் புதிய தலைவர்களை எதிர் பார்க்கிறோம். புத்தம்புது தலைவர்களையும், அவர்களுக்கு இருக்கும் உத்வேகத்தையும் நம்பித்தான் இதில் இறங்கி இருக்கிறேன். என்னுடைய கட்சியில் இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும், திறமையானவர்களுக்கும் அதிக வாய்ப்பு கொடுக்கப்படும். நான் தொடங்கும் கட்சிக்கு ஆம்ஆத்மி கட்சி போல பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டப்படும்.

    புதிய கட்சிக்கான அனைத்து பணிகளும் தொடங்கி விட்டன. அது எப்போது என்று அவசரப்பட்டு சொல்ல முடியாது. நிச்சயம் அது நடக்கும்.

    இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
    Next Story
    ×