செய்திகள்

ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதில் அமெரிக்கா அதிருப்தி

Published On 2017-11-23 11:16 GMT   |   Update On 2017-11-23 12:05 GMT
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:

பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்து மும்பையில் கடந்த 26-11-2008 அன்று குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 150-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு, மூளையாக இருந்து செயல்படுத்தியவர், ஹபீஸ் சயீத்.

லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்தின் நிறுவனரான இவர், அந்த இயக்கத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜமாத் உத்தவா என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை நடத்தி வருகிறார்.

ஹபீஸ் சயீத்தும், அவரது கூட்டாளிகள் 4 பேரும் பாகிஸ்தான் அரசால் கடந்த ஜனவரி மாத இறுதியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அவரும், அவரது இயக்கத்தினர் 37 பேரும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

இதனையடுத்து, ஹபீஸ் சயீத்தின் பெயர் தீவிரவாத தடுப்பு சட்ட பட்டியலின் 4-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.  

இதற்கு எதிராக லாகூர் உயர்நீதி மன்றத்தில் ஹபீஸ் சயீத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த மாதம் 14-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, ஹபீஸ் சயீதுக்கான வீட்டுக்காவலை நீட்டிக்க விரும்பவில்லை எனவும், அந்த உத்தரவை திரும்ப பெறுவதாகவும் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.

இன்னும் மூன்று தினங்களில் அவரது வீட்டுக்காவல் முடிவடையும் நிலையில், நேற்று நடந்த இந்த வழக்கின் விசாரணையில், வீட்டுக்காவலை மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என அரசுத்தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் ஹபீஸ் சயீத் மீதான வீட்டுக்காவலை நீட்டிக்க மறுத்து விட்டது.

ஹபீஸ் சயீதை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், ஹபீஸ் சயீத் விடுதலை செய்யப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐ.நா சபையில் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத், விடுவிக்கப்பட்டது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியானதை பார்த்து நாங்கள் உஷாரடைந்துள்ளோம் என அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

ஹபீஸ் சயீத் சுதந்திரமாக பாகிஸ்தானில் சுற்றி திரிந்தது வந்த நிலையில், இந்தியாவின் தொடர் அழுத்தம் காரணமாக அந்நாட்டு அரசு அவரை கடந்த ஜனவரி மாதம் வீட்டுக்காவலில் வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அவரது வீட்டுக்காவல் நீட்டிக்கப்பட்டும் வந்தது.
Tags:    

Similar News