செய்திகள்
சென்னை துறைமுகத்திற்கு கப்பலில் வந்த சீன பூனை

கப்பலில் வந்த சீன பூனை வண்டலூர் பூங்காவிற்கு அனுப்பப்படுகிறது

Published On 2020-02-18 09:01 GMT   |   Update On 2020-02-18 09:01 GMT
சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் இருந்த சீன பூனை ஓரிரு நாட்களில் வண்டலூர் பூங்காவிற்கு அனுப்பப்படுகிறது. இதனால் பொது மக்கள் கொரோனா வைரஸ் குறித்து பீதி அடைய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

சீனாவில் இருந்து வரும் சீன பயணிகள் மட்டுமின்றி பிற வெளிநாட்டவர்களும் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து வரும் தமிழகத்தை சேர்ந்தவர்களையும் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதால் இதுவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை.

இந்த நிலையில் சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு வந்த சீன கப்பலில் உள்ள பூனையால் கொரோனா வைரஸ் பீதி ஏற்பட்டது. பொம்மைகள் உள்ள கண்டெய்னரில் பூனை இருந்ததால் அது சீனாவில் இருந்து தான் வந்து இருக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இது பற்றி துறைமுக சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதிகாரிகள் கப்பலுக்கு சென்று பூனையை பிடித்து ஆய்வு மேற்கொண்டனர். வேப்பேரியில் உள்ள கால்நடை பராமரிப்பு மருத்துவமனைக்கு அந்த பூனையை கொண்டு வந்து பாதுகாப்பாக வைத்துள்ளனர். சீன கப்பலில் வந்த பூனை சீனா நாட்டில் இருந்து வரவில்லை எனவும் அது வழியில் உள்ள வேறு நாட்டில் இருந்து வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த பூனை மூலம் வைரஸ் தாக்காமல் இருக்க சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சீன கப்பலில் இருந்த பூனை சீனாவில் இருந்து வரவில்லை, அந்த பூனையை பத்திரமாக மீட்டு மருத்துவ ஆய்வு செய்து வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஒரிரு நாட்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அந்த பூனை கொண்டு விடப்படும். இதனால் பொது மக்கள் கொரோனா வைரஸ் குறித்து பீதி அடைய வேண்டாம் என்றார்.
Tags:    

Similar News