செய்திகள்
வைகோ

தமிழகத்திற்கு வரும் ஆபத்துகளை எதிர்க்க எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தைரியம் இல்லை- வைகோ ஆவேசம்

Published On 2019-10-13 12:17 GMT   |   Update On 2019-10-13 12:17 GMT
தமிழகம் பல்வேறு ஆபத்துகளை எதிர்நோக்கியுள்ளதால் அதனை எதிர்க்க எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தைரியம் இல்லை என்று வைகோ கூறியுள்ளார்.
நாங்குநேரி:

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. நாங்குநேரி மற்றும் களக்காடு பகுதிகளில் நேற்று மாலை வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக அரசு ஊழல் புதைகுழியில் புதைந்து கிடக்கிறது. நாட்டை உலுக்கிய குட்கா ஊழல், ஆம்னி பஸ் வாங்கியதிலும் ஊழல், காவல்துறை, தீயணைப்பு துறை ஆகியவற்றிற்கு தேவையான வாக்கி டாக்கி, சி.சி.டி.வி. டிஜிட்டல் கேமரா, ரேடியோ வாங்கியதிலும் ஊழல். ஏரி, குளம் தூர்வாரியதிலும் ஊழல். எல்லாவற்றிற்கும் மேலாக துணைவேந்தர் நியமனத்திலும் ஊழல் என அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதால், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க யாரும் முன்வரவில்லை. பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டும் எந்த தொழிலும் வரவில்லை. அ.தி.மு.க. அரசின் அணுகுமுறையால் இங்கு செயல்பட்ட தொழில்களும் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டன. தமிழகத்தில் 90 லட்சம் பட்டதாரி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். வேலையில்லாத் திண்டாட்டம் உச்சக்கட்டத்தில் உள்ளது.

வெளிநாட்டினருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளோம் என்று முதல்வர் கூறுகிறார். நீங்கள் எத்தனை பேருக்கு வேலை கொடுத்துள்ளீர்கள் நிரூபிக்க தயாரா? அவ்வாறு நிரூபித்தால் நான் உங்களுக்கு ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பேன் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் அதற்கு எந்த பதிலும் இல்லை.

நீட் தேர்வு கொண்டு வரவில்லை என்று ஏமாற்றினார்கள். அனிதா சாவுக்கும் இவர்கள் தான் காரணம். நீட் தேர்வு வேண்டாம் என்று மசோதா கொண்டு வந்துவிட்டோம் என்று கூறினார்கள். ஆனால் அந்த மசோதாவை அன்றே குப்பைத் தொட்டியில் வீசி விட்டோம் என்று மத்திய அரசு கூறிவிட்டது. இரண்டு ஆண்டுகளாக இதனை மறைத்து ஏமாற்றி விட்டார்கள். வெளிநாடுகளில் அணுமின் நிலையங்களை நிறுத்திவிட்டனர். ஆனால் கூடங்குளத்தில் அதனை விரிவுபடுத்தி வருகிறார்கள். இதனால் களக்காடு வரை சாம்பல் காடு ஆகிவிடும். தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. 

மேகதாது அணைகட்ட மறைமுகமாக அனுமதி கொடுத்துள்ளனர். இந்த அணையால் தென்பாண்டி மண்டலம் பஞ்சக்காடாகி விடும். தூத்துக்குடியில் காவல்துறையை கூலிப்படை போல் கொலை படையாக மாற்றி 13 பேரை சுட்டுக்கொன்றனர். தமிழகம் பல்வேறு ஆபத்துகளை எதிர்நோக்கியுள்ளது. அதனை எதிர்க்க எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தைரியம் இல்லை. 

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News