அழிந்து போவதற்கு பதிலாக... சரத் பவார், உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் மோடியின் அட்வைஸ்
- ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு, சிறிய கட்சிகள் காங்கிரசுடன் இணையும் என சரத் பவார் கூறுகிறார்.
- இதற்கு அர்த்தம் போலி தேசியவாத காங்கிரஸ் கட்சியும், போலி சிவசேனாவும் (உத்தவ் தாக்கரே) காங்கிரசுடன் இணைய முடிவு செய்துள்ளன என்பதுதான்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கட்டமாக பாராளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. முதல் 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 4-ம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 11 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருவதால், முக்கிய தலைவர்கள் மராட்டியத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நந்தூர்பர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் ஹீனா காவித் எம்.பி.க்கு ஆதரவாக நேற்று வாக்கு சேகரித்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:-
மராட்டியத்தில் கடந்த 40-50 ஆண்டுகளாக சுறுசுறுப்பாக பணியாற்றிய ஒரு பெரிய தலைவர் (சரத் பவார்) பாராமதி வாக்குப்பதிவுக்கு பிறகு கவலை அடைந்துள்ளார். ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு, சிறிய கட்சிகள் காங்கிரசுடன் இணையும் என அவர் கூறுகிறார்.
இதற்கு அர்த்தம் போலி தேசியவாத காங்கிரஸ் கட்சியும், போலி சிவசேனாவும் (உத்தவ் தாக்கரே) காங்கிரசுடன் இணைய முடிவு செய்துள்ளன என்பதுதான். ஆனால் காங்கிரசுடன் இணைந்து அழிந்து போவதற்கு பதிலாக அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டேவுடன் நீங்கள் இணைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.