செய்திகள்

கரும்பலகைக்கு மாணவர்களை பெயிண்ட் அடிக்க வைத்த ஆசிரியரை கண்டித்து மறியல்

Published On 2017-12-13 06:03 GMT   |   Update On 2017-12-13 06:04 GMT
முத்துப்பேட்டை அருகே கரும்பலகைக்கு மாணவர்களை பெயிண்ட் அடிக்க வைத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர் 50-க்கும் மேற்பட்டோர் மறியல் ஈடுபட்டனர்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிலரை, ஆசிரியர் ஒருவர் பள்ளியின் கரும்பலகைக்கு பெயிண்ட் அடிக்க விட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். உடனே பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். மேலும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இதற்கிடையே மாணவர்கள் கரும்பலகைக்கு பெயிண்ட் அடித்த புகைப் படம் வாட்ஸ் -அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவியது.

இந்தநிலையில் மாணவர்களை பெயிண்ட் அடிக்க வைத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர் வெற்றிவேல் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனால் மன்னார்குடி சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை டி.எஸ்.பி.இனிக்கோ திவ்யன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களை சமரசப்படுத்தினர். இதனையடுத்து மாணவர்கள் சமாதானம் அடைந்து திரும்பி சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒருமணி நேரம் போக்கு வரத்து தடைபட்டது.

Tags:    

Similar News