உள்ளூர் செய்திகள்

பெண்ணின் படத்தை மார்பிங் செய்து திருமண அழைப்பிதழ் அச்சிட்டு வினியோகம்- வாலிபர் கைது

Published On 2024-05-23 03:55 GMT   |   Update On 2024-05-23 03:55 GMT
  • பெண் மற்றும் அவரது பெற்றோர் திருமணத்தில் எங்களுக்கு விருப்பமில்லை என தெரிவித்துவிட்டனர்.
  • நீண்ட நெடிய காலத்திற்கு பின்னர் பார்த்த பெண்ணும் தனக்கு வசப்படவில்லையே என திருவேங்கை நாதன் ஏங்கினார்.

மணச்சநல்லூர்:

புதுக்கோட்டையை சேர்ந்தவர் திருவேங்கை நாதன் (வயது 40 ). இவர் திருமணம் செய்து கொள்வதற்காக ஆன்லைன் முலம் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து பெண் தேடி வந்தார்.

இந்த நிலையில் அவருடைய சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மணச்சநல்லூர் பகுதியில் இருப்பதை அறிந்தார்.

உடனே பெண் பார்க்கும் படலத்தில் இறங்கினார். கடந்த 2021-ம் ஆண்டு அவரது குடும்பத்துடன் மணச்சநல்லூரில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றார். ஆனால் அந்த பெண்ணிற்கு திருவேங்கையை பிடிக்கவில்லை. அதை தொடர்ந்து அந்தப் பெண் மற்றும் அவரது பெற்றோர் இந்த திருமணத்தில் எங்களுக்கு விருப்பமில்லை என தெரிவித்துவிட்டனர். ஆனால் திருவேங்கையால் அந்த பெண்ணை மறக்க இயலவில்லை. நீண்ட நெடிய காலத்திற்கு பின்னர் பார்த்த பெண்ணும் தனக்கு வசப்படவில்லையே என ஏங்கினார்.

பின்னர் ஆத்திரம் அடைந்த திருவேங்கைநாதன் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை தனது புகைப்படத்துடன் இணைத்து மார்பிங் செய்து போலி திருமண அழைப்பிதழ் அச்சடித்து, அதனை பெண் வீட்டாருக்கு தெரியாமல் இரு ஊர்களில் விநியோகம் செய்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், உடனே இச்சம்பவம் குறித்து மணச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் திருவேங்கநாதனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாததால் பெண்ணின் போட்டோவை மார்பிங் செய்து திருமண அழைப்பிதழ் அச்சிட்டு வினியோகம் செய்த வாலிபரை கைது செய்த சம்பவம் புதுக்கோட்டை மற்றும் மண்ணச்சநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News