தமிழ்நாடு செய்திகள்

திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

Published On 2025-12-19 13:56 IST   |   Update On 2025-12-19 13:56:00 IST
  • கடந்த 2 நாட்களாக அவர்கள் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது.
  • கணவன், மனைவி மற்றும் அவர்களது 2 மகள்கள் என 4 பேரும் இறந்த நிலையில் கிடந்தனர்.

திருச்சி:

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் ஸ்ரீரங்கத்திற்கு ஆண்டின் அனைத்து நாட்களிலும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்காக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அறை வசதிகள், தங்கும் விடுதிகள், உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிடங்களுடன் கூடிய யாத்ரி நிவாஸ் கட்டப்பட்டது.

இன்று ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியுள்ளதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் 21 நாட்களும் கண்டுகளிக்கும் வகையில் இந்த யாத்ரி நிவாசில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் (வயது 67) மற்றும் அவரது மனைவி செண்பகவல்லி (65) ஆகியோர் தங்களது 2 மகள்களுடன் கடந்த 10-ந்தேதி ஸ்ரீரங்கம் வருகை தந்தனர்.

பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தும் வகையில் அவர்கள் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாசில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இதற்கிடையே கடந்த 2 நாட்களாக அவர்கள் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து நிவாஸ் ஊழியர்கள் அந்த அறைக்கு முன்பாக நின்றுகொண்டு பலமுறை கதவை தட்டியும் உள்ளே இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. அத்துடன் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் உடனடியாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு கணவன், மனைவி மற்றும் அவர்களது 2 மகள்கள் என 4 பேரும் இறந்த நிலையில் கிடந்தனர்.

உணவில் விஷம் கலந்து அவர்கள் தற்கொலை செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

Similar News