இந்தியா

ரஞ்சித்சிங் சவுதாலா - நைனா சவுதாலா - சுனைனா சவுதாலா

அரியானாவில் ஓர் ஆச்சரியம்- ஒரே தொகுதியில் ஒரே குடும்பம் போட்டி

Published On 2024-05-23 03:18 GMT   |   Update On 2024-05-23 03:18 GMT
  • எங்கள் போட்டி என்பது குடும்பச் சண்டை அல்ல. இது குறிக்கோள்களை அடைய எங்களுக்குள் நடக்கும் போட்டி.
  • தேவிலால் குடும்பத்தில் யார் ஜெயித்தாலும் சவுதாலா குடும்பத்துக்கு ஒரு வெற்றி மாலை உறுதிதான்.

ஒரு குடும்பத்தில் பாகப்பிரிவினை நடக்கும்போது, ஒரு வீட்டையோ, குறிப்பிட்ட நிலத்தையோ கேட்டு வாரிசுகள் சண்டையிடுவது உண்டு.

அதுபோல் ஒரு பாராளுமன்ற தொகுதியை கைப்பற்ற ஒரே குடும்பத்தில் 3 பேர் தேர்தல் களத்தில் போட்டி போடுகிறார்கள்.

அரியானா மாநிலம் கிசார் பாராளுமன்ற தொகுதியை கைப்பற்றத்தான் அந்த போட்டா போட்டி நடக்கிறது.

தேர்தல்களத்தில் குதித்து இருக்கும் அந்த 3 பேரும் முன்னாள் துணை பிரதமர் தேவிலால் குடும்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு தேவிலால் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோம்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்தான், தேவிலால். பச்சைநிற தலைப் பாகையுடன் எப்போதும் எளிமையாக காணப்பட்ட ஓர் உயரமான மனிதர். விவசாயிகளின் தலைவராக இருந்தவர். சாட் சமூகத்தை சேர்ந்தவர். 1991-ம் ஆண்டுகளில் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதும், அவரைத் தொடர்ந்து சந்திரசேகர் பிரதமராக இருந்தபோதும் அவர்களின் மந்திரிசபைகளில் துணைப் பிரதமராக இருந்தவர்.

இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவரான அவர், அரியானா மாநிலத்தில் இருமுறை முதல்-மந்திரியாகவும் பதவி வகித்தவர். அவரைத் தொடர்ந்து அவருடைய மகன் ஓம்பிரகாஷ் சவுதாலா சிலமுறை அரியானா முதல்-மந்திரியாக இருந்திருக்கிறார்.

அரியானாவில் தற்போது முதல்-மந்திரி நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. பாராளுமன்றத் தேர்தலுக்காக அரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் 25-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. அங்குள்ள கிசார் தொகுதியைக் கைப்பற்றத்தான் தேவிலால் குடும்பத்தினர் இடையே போட்டி நிலவுகிறது. அந்த 3 பேரையும் இனி கொஞ்சம் அறிந்து கொள்வோம்.

1. ரஞ்சித்சிங் சவுதாலா (பா.ஜனதா) தேவிலால் மகன்களில் ஒருவரான இவருக்கு வயது 78 ஆகிறது. சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். சமீபத்தில் பா.ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு பாராளுமன்றத்துக்கு போட்டியிடுகிறார்.

கடந்த முறை வீசிய மோடி அலையில் அரியானாவில் 10 இடங்களிலும் பா.ஜனதா ஜெயித்தது போல் இந்த முறையும் வெற்றி உறுதி என்கிறார்.

2. நைனா சவுதாலா (ஜனநாயக ஜனதா கட்சி) சுருக்கமாகச் சொல்வது என்றால் இவர் தேவிலால் பேரனின் மனைவி. அதாவது தேவிலால் மகன் ஓம்பிரகாஷ் சவுதாலாவின் மகன் அஜய் சவுதாலாவின் மனைவி ஆவார்.

57 வயதாகும் இவர், 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். மாநிலம் முழுவதும் பெண்கள் பேரணியை நடத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறேன், அது எனது வெற்றிக்கு சாதகமாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். அரியானா துணை முதல்-மந்திரியாக இருந்த துஷ்யந்த் சவுதாலா, இவருடைய மகன் என்பது கூடுதல் தகவல்.

3. சுனைனா சவுதாலா (இந்திய தேசிய லோக் தளம்) இவரும் தேவிலால் இன்னொரு பேரன் ரவி சவுதாலா என்பவரின் மனைவி ஆவார். 47 வயதான இவர் கட்சியின் மகளிர் அணி பொதுச் செயலாளராக இருக்கிறார்.

ஒரே தொகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் போட்டியிடுவது பற்றி இவர் கூறுகையில், ''எங்கள் போட்டி என்பது குடும்பச் சண்டை அல்ல. இது குறிக்கோள்களை அடைய எங்களுக்குள் நடக்கும் போட்டி'' என்கிறார்.

வெற்றி யாருக்கு என்பதை கிசார் தொகுதி வாக்காளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு அரசியல்வாதிக்கு 2 மகன்களாம். தேர்தலில் எந்தக் கட்சி ஜெயித்தாலும் எங்கள் வீட்டுக்கு வெற்றி மாலை வரும் என்று அவர் நம்பிக்கையோடு சொல்வாராம். காரணம் அவருடைய ஒரு மகன் ஆளுங்கட்சியிலும், இன்னொரு மகன் எதிர்க்கட்சியிலும் இருக்கிறார்களாம். அதுபோல் தேவிலால் குடும்பத்தில் யார் ஜெயித்தாலும் சவுதாலா குடும்பத்துக்கு ஒரு வெற்றி மாலை உறுதிதான்.

இந்த 3 பேருக்கும் மத்தியில் காங்கிரஸ் வேட்பாளராக ஜெய்பிரகாஷ் என்பவர் இடையில் களத்தில் இருக்கிறார். இவர் இதே கிசார் தொகுதியில் ஜனதா தளம் கட்சி சார்பில் 1989-ம் ஆண்டு வெற்றிபெற்று வி.பி.சிங் மந்திரிசபையில் இடம் பிடித்து இருந்தவர்.

1996-ம் ஆண்டு அரியானா விகாஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு இதே தொகுதியை வென்றார். அதுபோல் 2004-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

தற்போது காங்கிரஸ் சார்பில் மீண்டும் களம் காணுகிறார். தொகுதி மக்களிடம் தனக்கு இருக்கும் நீண்ட நாள் தொடர்பு தனது வெற்றிக்கு உதவும் என்று உறுதியோடு வலம் வருகிறார். அந்த 3 பேருக்கும் இவர் சவாலாக இருப்பாரா? அல்லது சவுதாலா குடும்பத்திடம் வெற்றியை தாரை வார்ப்பாரா என்பது ஜூன் 4-ந் தேதி தெரிந்துவிடும்.

Tags:    

Similar News