செய்திகள்
சென்னை எழிலகத்தில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ ஆஜராகிவிட்டு வெளியே வந்த காட்சி.

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்ட வழக்கு: பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ ஆஜர்

Published On 2017-09-13 10:50 GMT   |   Update On 2017-09-13 10:50 GMT
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்ட வழக்கில் விவசாயிகளுக்கு ஆதரவாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பசுமை தீர்ப்பாயத்தில் இன்று ஆஜரானார்.
சென்னை:

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது. அந்த பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று புதுக்கோட்டை வடகாடு பாசன விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் விவசாயிகளுக்கு ஆதரவாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பசுமை தீர்ப்பாயத்தில் இன்று ஆஜரானார்.

சென்னை எழிலகத்தில் உள்ள தீர்ப்பாயத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடந்த பல மாதங்களாக விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

இந்த வழக்கில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இன்னும் பதில் கூறவில்லை. மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டமுறை நிறைவேறக் கூடாது. நிபுணர் சி.என்.ராவ், முதல் அமர்வில் இருப்பதால் இந்த விசாரணை 2-வது அமர்வில் வருகிறது.

அதனால் நவம்பர் மாதத்திற்கு வழக்கை ஒத்தி வைப்பதாக கூறினார். பின்னர் விளக்கி கூறியதை அடுத்து அக்டோபர் 11-ந் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தை மத்திய அரசு அடியோடு மூட முடிவு செய்ய திட்டமிட்டு இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட வேண்டும்.

இந்த விசாரணையின் போது தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் நியாயமான பதிலை அளித்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வைகோவுடன் வக்கீல்கள் செந்தில் செல்வம், நன்மாறன், சுப்பிமணி மற்றும் கழக குமார் உடன் சென்றனர்.
Tags:    

Similar News