செய்திகள்

மீண்டும் தீவிர அரசியலில் களம் இறங்கும் கண்ணன்

Published On 2017-09-13 06:34 GMT   |   Update On 2017-09-13 06:34 GMT
புதுவையில் மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ள கண்ணன் மீண்டும் அரசியலில் களம் இறங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:

புதுவை மாநில அரசியலில் சபாநாயகர், அமைச்சர் மற்றும் எம்.பி. என முக்கிய பதவிகளில் இருந்தவர் கண்ணன்.

காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கண்ணன் த.மா.கா., புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ், புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என 3 கட்சிகளை தொடங்கினார். ஒவ்வொரு முறையும் தனது கட்சியை மீண்டும் காங்கிரஸ் கட்சியிலேயே இணைத்தார்.

இந்த நிலையில் கண்ணன் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு நெருக்கத்தில் அ.தி.மு.க.வில் இணைந்தார். இதனையடுத்து அவருக்கு அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் என்ற பதவி வழங்கப்பட்டது.

அதோடு தனது சொந்த தொகுதியான ராஜ்பவனில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பும் அளிக்கப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக கண்ணன் சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார்.

இதனையடுத்து அவர் பல மாதங்களாக மவுனம் சாதித்து வந்தார். தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தின் போது, சென்னையில் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதே நேரத்தில் அ.தி.மு.க.வின் எந்த கூட்டத்திலும், போராட்டங்களிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால் கண்ணன் அ.தி.மு.க.வை விட்டு விலக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் கண்ணனை தொடர்பு கொண்டு கட்சியில் சேர அழைத்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால், கண்ணன் தொடர்ந்து மவுனமே சாதித்து வந்தார். இந்த நிலையில் நீட் தேர்வு தொடர்பான விவகாரத்தில் கண்ணன் தனது மவுனத்தை கலைத்தார். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2 அறிக்கைகளை வெளியிட்டார். ஆனால், அந்த அறிக்கையில் கண்ணன் தன்னை அ.தி.மு.க. என வெளிக்காட்டி கொள்ளவில்லை.

இத்தகைய சூழலில் கண்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான மாநில காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்தார். நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசு மாணவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டது என்று குற்றம் சாட்டினார்.

பாரதிய ஜனதா கட்சியினர் தங்களை கட்சியில் இணைக்க அழைத்தார்களா? என்ற கேள்விக்கு பாரதிய ஜனதா மேலிட தலைவர் ஒருவர் தன்னிடம் பேசியதாகவும், ஆனால், தான் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் புதுவை சட்டமன்றத்துக்கு மத்திய அரசு நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்த விவகாரத்தில் மத்திய பா.ஜனதா அரசுக்கு சாதகமாக கண்ணன் பதில் அளித்தார்.

மத்திய அரசின் முடிவில் யூனியன் பிரதேசமான புதுவை அரசு தலையிட முடியாது என்றும் அவர் கூறினார். இதனால் கண்ணன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபடலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதற்கு ஏற்றார் போல் எந்த கட்சி, எந்த இயக்கம் என்பதை பின்பு அறிவிப்பேன் என்றும் கண்ணன் தெரிவித்துள்ளார்.

மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளார். சற்று இடைவெளிக்கு பிறகு மீண்டும் கண்ணன் அரசியலில் களம் இறங்கி இருப்பது புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News