செய்திகள்

நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் பலகோடி ரூபாய் ஊழல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Published On 2017-08-07 10:04 GMT   |   Update On 2017-08-07 10:04 GMT
புதுவையில் பாரதீய ஜனதாவை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது. இந்த நியமனத்தில் பல கோடி ரூபாய் கைமாறி உள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

புதுச்சேரி:

முத்தியால்பேட்டை முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் கலியபெருமாள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரெஞ்சு காலம் தொட்டே புதுவையில் துறைமுகம் வாயிலாக வர்த்தகம் நடைபெற்று உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து கப்பல் மூலம் பொருட்கள் வந்து வியாபாரம் செழித்து வளர்ந்துள்ளது. இதனால் புதுவை பொருளாதார வளர்ச்சி பெற்று திகழ்ந்தது.

ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் வளர்ச்சி அதன் வணிகத்தை சார்ந்தே அமையும். இதனால் தான் புதுவை யில் துறைமுகம் மீண்டும் சீரமைக்கப்பட்டு கப்பல் போக்குவரத்து தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இது புதுவை மக்களுக்கு பொன் முட்டையிடும் வாத்தாக அமையும். துறைமுகம் மூலம் வியாபாரம் பெருகி புதுவையின் பொருளாதாரமும் வளரும்.

ஆனால் இந்த திட்டத்தால் அரசியல் வாதிகளுக்கு தான் தங்க முட்டை கிடைத்து கொண்டே இருக்கும் என்று கவர்னர் கூறி இருக்கிறார். அவர் போலீஸ் துறையில் மூத்த அதிகாரியாக இருந்ததால் போலீசுக்கே உரிய சந்தேக கண்ணோட்டத்துடனேயே எல்லாவற்றையும் பார்க்கிறார். குறுகிய வட்டத்துக்குள் அவர் இருக்கிறார்.

புதுவையில் உள்ள அமைச்சர்கள் யாரும் வறுமையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல. பாரம்பரியமாகவே வசதி படைத்தவர்கள் தான். தங்கம் முட்டை அவர்களுக்கு தேவையில்லை.

புதுவையில் பாரதீய ஜனதாவை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது. கவர்னரின் சிபாரிசின் பேரில் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த நியமனத்தில் பல கோடி ரூபாய் கைமாறி உள்ளது. இது சம்பந்தமாக அந்த கட்சியினரே அடித்து கொண்ட சம்பவமும் நடந்துள்ளது.

இதில் பாரதீய ஜனதா கட்சியில் உள்ள ஒரு முக்கிய நபருக்கு தங்கமுட்டை கிடைத்துள்ளது. அதாவது கவர்னர் சிபாரிசின் பேரில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் நியமனத்திலேயே பெரிய ஊழல் நடந்து இருக்கிறது. கவர்னருக்கு தெரிந்து இது நடந்ததா என்பது எங்களுக்கு தெரியாது.

ஆனால் இந்த நியமனத்தில் கவர்னர் சம்பந்தப்பட்டு இருப்பதால் முதலில் இதைப் பற்றி விசாரித்து தெளிவு படுத்த வேண்டும். இதன் பிறகு கவர்னர், காங்கிரசாரைப்பற்றி குறை கூறட்டும்.

புதுவையின் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் போல கவர்னர் செயல்படுகிறார். மேன்மை வாய்ந்த கவர்னர் பதவி மாண்பை காக்கும் வகையில் இலவச அரிசி போன்ற நல்ல திட்டங்களை முடக்கி வைக்காமல், தாங்கள் பதவி முடிந்து சென்ற பிறகும் போற்றப்படும் வகையில் செயல் படவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News