செய்திகள்

திருவண்ணாமலை அருகே வாரிசு வேலை கேட்டு பூசாரியை அடித்துக் கொன்ற மகன்

Published On 2017-07-22 11:23 GMT   |   Update On 2017-07-22 11:23 GMT
வாரிசு வேலை கேட்டு பூசாரியை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தண்டராம்பட்டு:

திருவண்ணாமலை அருகே உள்ள வாணாபுரம் கொங்கிலிய நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 65). அதே பகுதியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் கண்ணன் பூசாரியாக இருந்தார்.

இவருக்கு சரவணன் (49), மணிகண்டன் (47), அய்யனார் (45) என்று 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் தனித்தனியே வசித்து வருகிறார்கள். கண்ணனும் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், பூசாரி வேலையை வாரிசு அடிப்படையில் தனக்கு விட்டு கொடுக்கும்படி, கண்ணனிடம் அவரது மூத்த மகன் சரவணன் கேட்டார். இதற்கு கண்ணன் ‘முடியாது’ என்று திட்டவட்டமாக கூறி வந்தார்.

இதுதொடர்பாக, தந்தை- மகன் இடையே அடிக்கடி தகராறு நடந்தது. நேற்றிரவும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சரவணன், தந்தை என்றும் பார்க்காமல் கண்ணனை சரமாரியாக அடித்து, உதைத்தார்.

மேலும், ஆத்திரம் அடங்காமல் தந்தையை கீழே தள்ளி அவரது தலையை தரையில் முட்டியே கொடூரமாக கொலை செய்தார். தலையில் பலத்த காயமடைந்த கண்ணன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

தகவலறிந்ததும் வாணாபுரம் போலீசார் விரைந்து வந்தனர். கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து தந்தையை கொன்ற மகன் சரவணனை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News