உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 4 போலீசார் பலி

Published On 2024-04-30 04:26 GMT   |   Update On 2024-04-30 04:26 GMT
  • குறிப்பிட்ட வீட்டை போலீசார் நெருங்கும்போது தேடப்படும் சந்தேக நபர் துப்பாக்கியால் சுட்டார்.
  • மோதலுக்குப் பிறகு அந்த வீட்டில் ஒரு பெண்ணும் 17 வயது ஆணும் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் சார்லோட் நகரில் உள்ள ஒரு வீட்டில் தேடப்படும் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்றனர்.

அப்போது அந்த வீட்டில் இருந்த 2 வாலிபர்கள், போலீசார் மீது திடீரென்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். உடனே போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

மூன்று மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் 4 போலீசார் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய ஒரு நபர் உயிரிழந்தார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.

அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதுகுறித்து காவல்துறைத் தலைவர் ஜானி ஜென்னிங்ஸ் கூறும் போது, நமது சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முயற்சித்த சில ஹீரோக்களை இன்று நாம் இழந்து விட்டோம். குறிப்பிட்ட வீட்டை போலீசார் நெருங்கும்போது தேடப்படும் சந்தேக நபர் துப்பாக்கியால் சுட்டார். அவர் வீட்டு வாசலில் கொல்லப்பட்டார்.

அவர் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றவாளியாகத் தேடப்படுபவர். மோதலுக்குப் பிறகு அந்த வீட்டில் ஒரு பெண்ணும் 17 வயது ஆணும் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

Tags:    

Similar News