இந்தியவுடன் போர் செய்ய ஏங்கும் அசிம் முனீர் - இம்ரான் கான் சகோதரி பரபரப்பு பேட்டி
- எனக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது.
- இம்ரான் கான் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும், அவர் இந்தியாவுடன் நட்பு கொள்ள முயற்சித்தார், பாஜகவுடன் கூட.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக சிறையில் உள்ள இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து இம்ரான்கானின் சகோதரிகள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது.
இதற்கிடையே இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறைக்கு சென்று இம்ரான்கானை சந்தித்தார்.
பின்னர் வெளியே வந்த உஸ்மா கூறும்போது,"இம்ரான்கான் நலமுடன் உள்ளார். ஆனால் அவருக்கு மனரீதியான துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது" என்றார்.
இதற்கிடையே தனது சகோதரியை சந்தித்த பிறகு இம்ரான் கான் அளித்த அறிக்கையை அவரது கட்சி வெளியிட்டது.
அதில், எனக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. அவர்களுக்கு தற்போது என்னைக் கொலை செய்வதுதான் பாக்கி இருக்கிறது. எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. என்று அவர் தெரிவித்தார்.
இந்த சூழலில் இம்ரான் கான் சகோதரி அலீமா கானும் 'ஸ்கை நியூஸ்' சேனலுக்கு அளித்த பேட்டியில், "அசீம் முனீர் ஒரு அடிப்படைவாத இஸ்லாமியர். அதனால்தான் அவர் இஸ்லாத்தை நம்பாதவர்களுடன் சண்டையிட விரும்புகிறார்.
இம்ரான் கான் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும், அவர் இந்தியாவுடன் நட்பு கொள்ள முயற்சித்தார், பாஜகவுடன் கூட.
ஆனால் முனீர் போன்ற ஒருவர் இருக்கும்போது, இந்தியாவுடன் போர் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. அவர் இந்தியாவுடன் போருக்காக ஏங்குகிறார்" என்று அலீமா தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரில் 26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்காரவாத தாக்குதலுக்கு பிறகு மே மாத தொடக்கத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட 3 நாட்களில் அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.