உலகம்

ராணுவ தளபதிக்கு உயரிய அங்கீகாரம்..! பாகிஸ்தானின் பாதுகாப்பு படைகளின் தலைவராக அசிம்முனீர் நியமனம்

Published On 2025-12-05 18:32 IST   |   Update On 2025-12-05 18:32:00 IST
  • அசிம் முனீரை நியமித்து அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் அளித்தார்.
  • இதுவரை முப்படைகளுக்கான அதிகாரம், அதிபர் மற்றும் அமைச்சரவை கட்டுப்பாட்டில் இருந்தது.

பாகிஸ்தானில் பாதுகாப்பு படைகளின் தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது. இதற்காக அரசியல் சாசனத்தின் 243-வது பிரிவில் 27-வது திருத்தத்தை மேற்கொள்ளும் மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் கடும் பின்னடைவை சந்தித்ததால் பாகிஸ்தான் அரசு இந்த முடிவை எடுத்தது. மேலும் ராணுவ தளபதியான பீல்டு மார்ஷல் அசிம் முனீருக்கு பதவி நீட்டிப்பு வகையிலும் இந்த புதிய பதவி உருவாக்கப்பட்டது.

இந்தநிலையில் பாகிஸ்தானின் முதல் பாதுகாப்பு படைகளின் தலைவராக அசிம் முனீரை நியமித்து அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் அளித்தார்.

இதுதொடர்பாக அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், 5 ஆண்டு காலத்திற்கு பாதுகாப்புப் படைகளின் தலைவராக, ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீரை நியமனம் செய்ய பிரதமர் சமர்ப்பித்த பரிந்துரையை அதிபர் ஆசிப் அலி சர்தாரி அங்கீகரித்துள்ளார்.

புதிதாக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு படை அலுவலகத்திற்குப் பொறுப்பேற்கும் முனீர் ராணுவத் தளபதியாகவும் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு படைகளின் தலைவர் பதவி என்பது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என மூன்றையும் கட்டுப் படுத்த வழிவகுக்கும்.

இதுவரை முப்படைகளுக்கான அதிகாரம், அதிபர் மற்றும் அமைச்சரவை கட்டுப்பாட்டில் இருந்தது. இனி அந்த அதிகாரம் ஒரு நபரின் கீழ் வரும்.

Tags:    

Similar News