காங்கோவில் கனிமவள சுரங்கம் இடிந்து 200 தொழிலாளர்கள் பலி
- நிலச்சரிவு ஏதும் ஏற்படவில்லை, குண்டுவெடிப்பு காரணமாக 5 பேர் மட்டுமே பலியானார்கள் என கிளர்ச்சிக் குழுவின் அதிகாரி கூறினார்.
- பலி எண்ணிக்கையை வெளியே சொல்லக் கூடாது என சுரங்க உரிமையாளர்கள் எங்களை மிரட்டுகிறார்கள் என தொழிலாளி கூறினார்
கின்ஷாசா:
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கனிமவள சுரங்கம் இடிந்து விழுந்து 200 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பலியாகினர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கனிம வளம் நிறைந்த ருபாயா பகுதியில் மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் டான்டலம் மற்றும் நியோபியம் உலோகங்களைப் பிரித்தெடுக்கும் ஒரு முக்கியமான கருப்பு நிற தாதுவான 'கோல்டன் தாது' உள்ள சுரங்கம் செயல்பட்டு வருகிறது.
இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கங்களில் கனிமங்களை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென சுரங்கம் ஆங்காங்கே சரிந்து விழுந்தது. சத்தம் கேட்டு தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். ஆனால் அதற்குள் சுரங்கம் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தனர்.
இந்த சுரங்கப் பகுதி தற்போது எம்.23 என்ற கிளர்ச்சிக் குழுவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. ரவாண்டா நாட்டின் ஆதரவு பெற்ற இந்த கிளர்ச்சியாளர்கள், கடந்த 2024 மே மாதம் முதல் இந்த சுரங்கத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அங்கிருந்து எடுக்கப்படும் கனிமங்களுக்கு வரி விதிப்பதன் மூலம் மட்டும் மாதம் தோறும் சுமார் ரூ.6% கோடி (8 லட்சம் அமெரிக்க டாலர்) வருமானம் ஈட்டி வருகின்றனர்.
விபத்து குறித்துப் பேசிய கிளர்ச்சிக் குழுவின் அதிகாரி பென்னிகாஜ். "அங்கு நிலச்சரிவு ஏதும் ஏற்படவில்லை, குண்டுவெடிப்பு காரணமாக 5 பேர் மட்டுமே பலியானார்கள்" என மழுப்பலாகக் கூறி பலி எண்ணிக்கையை மறைக்க முயன்றார்.
ஆனால், மீட்புப் பணியில் ஈடுபட்ட இப்ராகிம் என்ற தொழிலாளி கூறுகையில், "நாங்கள் எங்கள் கண்ணெதிரே 200-க்கும் மேற்பட்ட உடல்களை மீட்டுள்ளோம். பலி எண்ணிக்கையை வெளியே சொல்லக் கூடாது என சுரங்க உரிமையாளர்கள் எங்களை மிரட்டுகிறார்கள்" எனப் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்மார்ட்போன்கள். லேப்டாப்கள் மற்றும் விமான என்ஜின்கள் தயாரிக்கத் தேவையான 'டான்டலம்' எனும் அரிய உலோகம் இந்த 'கோல்டன்' தாதுவிலிருந்துதான் கிடைக்கிறது. இது வெப்பத்தை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டிருப்பதால், மின்னணுப் பொருட்களின் மின்தேக்கிகள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகத் தேவையில் 15 சதவீதத்திற்கும் அதிகமான கோல்டன் தாது இந்த ருபாயா சுரங்கத்திலிருந்தே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கடந்த மாதம் இதேபோன்ற ஒரு விபத்தில் 200 பேர் பலியான நிலையில், தற்போது மீண்டும் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது காங்கோ மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.