உலகம்

30 நாட்களுக்கு மட்டும் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அனுமதி வழங்கிய அமெரிக்கா!

Published On 2026-03-06 09:03 IST   |   Update On 2026-03-06 09:58:00 IST
  • இந்தியா தனது தேவையில் 40% எண்ணெயை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது.
  • எதிர்காலத்தில் இந்தியா அமெரிக்காவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை வாங்கும்.

மத்திய கிழக்கில் போர் நடப்பதால் உலகம் முழுவதிலும் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தனது தேவையில் 40% எண்ணெயை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் இருப்பு 25 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.

தற்போது ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளதால், இந்தியாவிற்கு மாற்று வழி அவசியமாகிறது.

இந்தியாவுக்கு கூடுதல் எண்ணெய் வழங்குவதாக ரஷியா முன்வந்தது. ஏற்கனவே கப்பலில் ஏற்றப்பட்டு கடலில் தயார் நிலையில் உள்ள ரஷிய எண்ணெய்யை இந்தியாவுக்கு விற்பதில் ரஷியா முனைப்பு காட்டும் சூழலில் இந்தியா தயக்கம் காட்டியது.

ரஷிய எண்ணெய்யை வாங்க மாட்டோம் என்று அண்மையில் அமெரிக்காவுடன் செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா வாக்குறுதி அளித்தது. இதனால் ரஷிய எண்ணெய் இறக்குமதியை இந்தியா கணிசமாக குறைந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் அவசர கால அடிப்படையில் அடுத்த 30 நாட்களுக்கு மட்டும் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அனுமதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

"இந்த 30 நாள் சலுகை ஏற்கனவே நடுக்கடலில் உள்ள கப்பல்களுக்கு மட்டுமே பொருந்தும். இதனால் ரஷ்யாவிற்குப் பெரிய நிதி ஆதாயம் கிடைக்காது" என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இந்தியா அமெரிக்காவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை வாங்கும் என்று வாஷிங்டன் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் ரஷிய எண்ணெயை உடனடியாக வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

ஏற்கனவே சுமார் 2 கோடி பீப்பாய்கள் ரஷிய எண்ணெயை இந்திய நிறுவனங்கள் வர்த்தகர்களிடமிருந்து வாங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸும் ரஷிய எண்ணெயை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

Tags:    

Similar News