உலகம்

IRIS Bushehr: நடுக்கடலில் சிக்கித் தவித்த மற்றொரு ஈரான் போர் கப்பலையும் 208 வீரர்களையும் மீட்ட இலங்கை!

Published On 2026-03-06 07:52 IST   |   Update On 2026-03-06 07:52:00 IST
  • இந்தக் கப்பலும் இலக்காகக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது.
  • நாங்கள் இந்தப் போரில் எந்தப் பக்கமும் சாயவில்லை.

இந்தியாவில் ராணுவ பயிற்சி முடிந்து திரும்பிக் கொண்டிருந்த ஈரானின் ஐரிஸ் டெனா போர்க்கப்பல் கடந்த மார்ச் 4 ஆம் தேதி இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.

இதில் கப்பலில் இருந்த ஈரான் ராணுவ வீரர்கள் 87 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் மாயமாகினர். மீட்பு நடவடிக்கையில் ஈரான் கடற்படை ஈடுபட்டு வருகிறது.

இந்த சூழலில் மற்றொரு ஈரானிய போர் கப்பலான ஐரிஸ் புஷெர் அதில் இருந்த 208 வீரர்களை மனிதாபிமான அடிப்படையில் மீட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

மார்ச் 5 (வியாழக்கிழமை) அன்று, இந்தக் கப்பலில் இருந்த 53 அதிகாரிகள், 84 பயிற்சி அதிகாரிகள், 48 மூத்த மாலுமிகள் மற்றும் 23 மாலுமிகள் என மொத்தம் 208 வீரர்களை இலங்கை கடற்படை பத்திரமாக மீட்டது.

இந்த கப்பலின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், அது நடுக்கடலில் தவித்தது. முந்தைய நாள் மற்றொரு கப்பல் தாக்கப்பட்டதால், இந்தக் கப்பலும் இலக்காகக்கூடும் என்ற அச்சத்தில் இந்த மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கொழும்பு துறைமுகம் வணிக ரீதியாக முக்கியமானது என்பதால், பாதுகாப்புக் கருதி இந்தக் கப்பலை இலங்கையின் வடகிழக்கில் உள்ள திருகோணமலை துறைமுகத்திற்கு இலங்கை கடற்படை கொண்டு செல்கிறது.

இலங்கை அதிபர் இது குறித்து தொலைக்காட்சியில் உரையாற்றுகையில், "நாங்கள் இந்தப் போரில் எந்தப் பக்கமும் சாயவில்லை.

எங்களின் நடுநிலைமையை பேணிக்கொண்டே, மனித உயிர்களைக் காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். "இப்படி ஒரு போரில் எவரும் இறக்கக்கூடாது. ஒவ்வொரு உயிரும் விலையுயர்ந்தது" என்றார்.

இதற்கிடையே மார்ச் 4 அன்று தாக்குதலுக்கு உள்ளன ஐரிஸ் டேனா போர் கப்பலில் சுமார் 180 வீரர்கள் இருந்ததாகக் கருதப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 32 வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதுவரை 87 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. காணாமல் போன 61 வீரர்கள் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர். இந்திய கடற்படையும் மீட்பு பணியில் உதவி வருகிறது. 

Tags:    

Similar News