உலகம்

'இஸ்ரேலுக்காக நாங்கள் ஏன் போர்புரிய வேண்டும்' - போருக்கு எதிராக முழக்கமிட்ட முன்னாள் அமெரிக்க வீரர்... கையை உடைத்த காவல்துறை?

Published On 2026-03-05 19:40 IST   |   Update On 2026-03-05 19:40:00 IST
  • ஈரானில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 6,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
  • அமெரிக்கக் கடற்படை ஈரானின் 17 போர்க்கப்பல்களை அழித்துள்ளது.

இஸ்ரேலின் போரை நாங்கள் நடத்த விருப்பமில்லை என ஈரான் மீதான தாக்குதல்கள் குறித்து அமெரிக்க முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்க மேலவை (Senate) துணைக் குழு விசாரணையின் போது, பிரையன் மெக்கின்னிஸ் என்ற அமெரிக்க முன்னாள் கடற்படை வீரர் இஸ்ரேலுக்காகப் போர் புரிய தங்களுக்கு விருப்பமில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் இஸ்ரேலுக்காக, அமெரிக்கா தனது மகன்களையும் மகள்களையும் போருக்கு அனுப்ப விரும்பவில்லை. இஸ்ரேல் தான் இந்தப் போருக்குக் காரணம். அமெரிக்கா இஸ்ரேலுக்காக இந்தப் போரை நடத்த விரும்பவில்லை. பாலஸ்தீனத்தை விடுவியுங்கள். போரை நிறுத்துங்கள்." என முழக்கமிட்டார். இதனால் அங்கிருந்த காவலர்கள் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்ற முயன்றனர்.

அப்போது அவர் அங்குள்ள கதவை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இருப்பினும் பாதுகாப்புப் படையினர் அவரை வெளியே கொண்டுசெல்ல வேகமாக இழுத்தனர். இதில் அவர் கை கதவுகளுக்கு இடையில் மாட்டிக்கொண்டது. இதனைத்தொடர்ந்தும் பாதுகாப்பு படையினர் அவரை இழுத்ததால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து மெக்கின்னிஸ் மீது போலீசாரைத் தாக்கியது, கைது செய்யப்படுவதைத் தடுத்தது மற்றும் சட்டவிரோதமாகப் போராட்டம் நடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மோதலில் மூன்று போலீஸ் அதிகாரிகளும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கையே இந்தச் சம்பவத்திற்கு முக்கிய காரணமாகும். பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஒரு பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலைத் தொடங்கின. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்தார். 

இதனால் ஈரான் பதில் தாக்குதலைத் தொடர்ந்தது. தற்போது வளைகுடா நாடுகள்மீதும் ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. இதனால் மத்தியில் போர்பதற்றம் அதிகரித்துள்ளது. ஐந்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்துவரும் இந்த தாக்குதலில் ஈரானில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 6,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்கக் கடற்படை ஈரானின் 17 போர்க்கப்பல்களை அழித்துள்ளது. இதில் ஒரு நீர்மூழ்கிக் கப்பலும் அடங்கும். இதனிடையே ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு உலக நாடுகள் மட்டுமின்றி அமெரிக்கர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அமெரிக்கா தனது வீரர்களை இஸ்ரேலுக்காகப் பலிகொடுக்கக் கூடாது என்று கூறிப் போராடி வருகின்றனர். அதன் வெளிப்பாடுதான் இந்த சம்பவமும்.

Tags:    

Similar News