உலகம்

இந்தியாவின் விருந்தினராக வந்த போர்க்கப்பலை அழித்த அமெரிக்கா- வருத்தப்படுவீங்க என ஈரான் எச்சரிக்கை

Published On 2026-03-05 15:33 IST   |   Update On 2026-03-05 15:48:00 IST
  • இந்தியா நடத்திய 'சர்வதேச கடற்படை சீராய்வு-2026' என்ற ராணுவப் பயிற்சியில் பங்கேற்றது.
  • இலங்கை கடற்படையினர், தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்து 32 பேரை காயத்துடன் மீட்டனர்.

இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் சென்று கொண்டிருந்த ஈரான் கடற்படையின் ஐரிஸ் டெனா போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது.

இத்தாக்குதல் இலங்கை தெற்கு கடற்பகுதியில் இருந்து 40 நாட்டிக்கல் தொலைவில் நடந்தது. 180 பேர் இருந்த அந்த ஈரான் போர்க்கப்பல் சேதமடைந்து மூழ்க தொடங்கியது. போர்க்கப்பலில் இருந்து இலங்கை கடற்படைக்கு அவசர உதவி அழைப்பு அனுப்பப்பட்டது.

இதையடுத்து விரைந்து சென்ற இலங்கை கடற்படையினர், தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்து 32 பேரை காயத்துடன் மீட்டனர். இந்த தாக்குதலில் 87 பேர் பலியாகி உள்ளனர். 61 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஐரிஸ் டெனா போர்க் கப்பல், சில நாட்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்தில் இந்தியா நடத்திய 'சர்வதேச கடற்படை சீராய்வு-2026' என்ற ராணுவப் பயிற்சியில் பங்கேற்றது. அந்த பயிற்சியை முடித்து கொண்டு புறப்பட்டு சென்றபோது அமெரிக்க தாக்குதலில் சிக்கியது.

இந்த நிலையில் ஐரிஸ் டெனா போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

ஈரான் கடற்கரையில் இருந்து 2 ஆயிரம் மைல்கள் தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு அட்டூழியத்தைச் செய்துள்ளது.

கிட்டத்தட்ட 130 மாலுமிகளை ஏற்றிச் சென்ற இந்திய கடற்படையின் விருந்தினரான ஐரிஸ் டெனா போர்க்கப் பலை சர்வதேச கடல்பகுதியில் எந்த எச்சரிக்கையும் விடுக்காமல் தாக்கி உள்ளது.

எனது வார்த்தைகளை குறித்து வைத்து கொள்ளுங்கள். அமெரிக்கா தனது செயலுக்காக மிகவும் வருத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News