செய்திகள்

மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை சட்டத்தை வரவேற்கிறேன்: ஜான்பாண்டியன் பேட்டி

Published On 2017-06-17 10:35 GMT   |   Update On 2017-06-17 10:35 GMT
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி தடை சட்டத்தை முழு மனதுடன் வரவேற்கிறேன் என்று ஜான்பாண்டியன் கூறினார்.

மன்னார்குடி:

திருவாரூர் தெற்கு மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் கோட்டூர் அருகே உள்ள ஆதிச்சபுரத்தில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கோட்டூர் ஒன்றிய செயலாளர் ஆனந்தவேல் பாண்டியன் வரவேற்றார்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநிலத்தலைவர் ஜான்பாண்டியன் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் சந்திரன், இமான்சேகர், நெல்லையப்பன், பாலை பட்டாபிராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

முன்னதாக ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஜூன் 12-ல் மேட்டூர் அணை வழக்கமாக திறக்கப்படும் ஆனால் கடந்த 6 வருடமாக திறக்கப்படவில்லை. இதற்கு கர்நாடக மற்றும் மத்திய அரசுகள் தான் காரணம். மேலும் தமிழக அரசும் தன் பங்கிற்கு தமிழக விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் அதனை அலட்சியப்படுத்துவது தவறானது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் தமிழக மற்றும் மத்திய அரசுகள் உடனே நிவாரணம் வழங்க வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி தடை சட்டத்தை முழு மனதுடன் வரவேற்கிறேன். பசுமாடு தெய்வமாக வணங்கபடுவதால் மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஏற்க முடியாது. அது போல ஜாதி ரீதியான இடஒதுக்கீட்டு முறையை முற்றிலும் எதிர்க்கிறேன். மக்களின் விகிதாச்சார அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க பட வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அனைவருக்கும் எதிரானது. அது போல நீட் தேர்வு முறையையும் மத்திய அரசு கைவிட வேண்டும். ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழக அரசு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றி அதனை சிறப்பு சட்டமாக கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News