உலகம்

இஸ்ரேல் ராணுவ வீரர்களை சிறைப்பிடித்ததாக ஹமாஸ் தகவல்

Published On 2024-05-26 10:06 GMT   |   Update On 2024-05-26 10:06 GMT
  • இஸ்ரேல் படைகளுடன் ஹமாஸ் அமைப்பினர் சண்டையிட்டு வருகிறார்கள்.
  • பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பதவி விலக வேண்டும்.

பாலஸ்தீனத்தின் காசா முனையில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இஸ்ரேல் படைகளுடன் ஹமாஸ் அமைப்பினர் சண்டையிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவ வீரர்களை சிறைப்பிடித்துள்ளதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து அல் கஸ்சாம் படைப்பிரிவின் ஹமாஸ் அமைப்பு செய்தித் தொடர்பாளர் அபு உபைதா கூறும் போது, வடக்கு காசாவில் ஜபாலியாவில் நடந்த சண்டையின் போது சுரங்கப்பாதைக்குள் பதுங்கியிருந்த இஸ்ரேல் ராணுவ வீரர்களை இழுத்து வந்தனர். இதில் சில இஸ்ரேல் வீரர்கள் உயிரிழந்தனர். பலரை சிறைப்பிடித்துள்ளனர்.

அவர்கள் காயமடைந்து உள்ளனர் என்று தெரிவித்தார். ஒரு சுரங்கப்பாதையில் ரத்தம் தோய்ந்த ஒரு நபர் தரையில் இழுத்துச் செல்லப்படும் வீடியோ, கைப்பற்றபட்ட துப்பாக்கி புகைப்படங்களை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டனர். ஆனால் இதை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. ஒரு ராணுவ வீரர் கூட கடத்தப்பட்ட சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தது.

இதற்கிடையே ஹமாஸ் அதிகாரி ஒசாமா ஹம்டன் கூறும்போது, இஸ்ரேலுடன் புதிய பேச்சுவார்த்தைகள் தேவையில்லை. இது போன்ற பேச்சுவார்த்தைகள் இஸ்ரேல் ராணுவத்திற்கு காசாவில் "ஆக்கிரமிப்பைத் தொடர அதிக அவகாசம் தருவதாக இருக்கிறது என்றார்.

ஹமாஸ் அமைப்பினரிடம் பிணைக்கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களை மீட்டுக்கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையே தலைநகர் டெல் அவிலில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பதவி விலக வேண்டும். புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு மோதல் வெடித்தது.

Tags:    

Similar News