search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜான்பாண்டியன்"

    • பா.ஜனதா தலைமையில் கூட்டணி கட்சிகள் இணைந்து வருகின்றனர்.
    • தென் மாவட்டங்களில் தனி தொகுதியாக இருப்பது தென்காசி தொகுதி மட்டுமே.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் பிரதான கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே பா.ஜனதா தலைமையில் கூட்டணி கட்சிகள் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் தேசிய கட்சியான பா.ஜனதாவின் கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும் இணைந்துள்ளது என அதன் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் உறுதிப்படுத்திய நிலையில் அவருடன் தொகுதி பங்கீடுக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இதுகுறித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இணைந்துள்ளோம். மக்களவை மற்றும் ராஜ்ய சபா ஆகியவற்றில் தலா ஒரு சீட் கேட்டு உள்ளோம். மக்களவைத் தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விருப்பத்தொகுதி என 3 தொகுதிகளை கொடுத்துள்ளோம்.

    அதில் தென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தொகுதியும் அடங்கும். பெரும்பாலும் தென் மாவட்டத்தில் உள்ள தொகுதியில் கண்டிப்பாக போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. எங்களது கோரிக்கைகளை தெரிவித்து விட்டோம். விரைவில் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என்றார்.


    தென் மாவட்டங்களில் தனி தொகுதியாக இருப்பது தென்காசி தொகுதி மட்டுமே. எனவே அந்த தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டபோது, தனி தொகுதியில் தான் நிற்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. எந்த தொகுதியிலும் நிற்க வாய்ப்பு இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

    தென்காசி தொகுதியில் தற்போது தி.மு.க.வை சேர்ந்தவர் எம்.பி. ஆக இருந்து வருகிறார். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.

    இதேபோல் அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் வென்றுள்ளன. இந்த தொகுதியில் பா.ஜனதாவுக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்பதால் அக்கட்சியினர் தங்களது கட்சி நிர்வாகிகளுக்கு தென்காசி பாராளுமன்ற தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

    அந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு விஸ்வை ஆனந்தன், பொன் பால கணபதி, வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி உள்ளிட்ட பலரும் ஆர்வம் காட்டி வரும் சூழ்நிலையில் ஜான்பாண்டியனும் தென்காசி தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார்.

    இதனால் அவருக்கு அந்த தொகுதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவ்வாறு இல்லை எனில் நாகப்பட்டினம், நீலகிரி ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்று வழங்கப்படலாம் என்று அக்கட்சியினரின் மத்தியில் பேசப்படுகிறது.

    ×