உள்ளூர் செய்திகள்

உடுமலை சின்னாறு சோதனைச்சாவடியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

Published On 2024-05-26 09:27 GMT   |   Update On 2024-05-26 09:27 GMT
  • அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரள மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது.
  • பாம்பாற்றுக்கு வரும் தண்ணீரை மறித்து பட்டிசேரி அணை கட்டப்பட்டுள்ளது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 90 அடி. 4 டிஎம்சி., நீர் கொள்ளளவு கொண்டது. 1958-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை மூலமாக, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் அமராவதி ஆற்றுப்படுகை மூலமாக 110 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரள மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது. இந்த ஆறு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும்.

இந்தநிலையில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா, வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட, பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொது மக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கேரளாவின் சட்டவிரோத, தமிழ்நாட்டின் உரிமையை பாதிக்கின்ற தடுப்பணை திட்டம் செயல்படுத்துவதை கண்டித்து உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் வழியில் உள்ள சின்னாறு சோதனை சாவடியை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த முற்றுகை போராட்டத்தில் அமராவதி ஆற்று பாசன விவசாயிகள், அனைத்து விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உழவர் போராளிகள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறுகையில்,

1957ம் ஆண்டு காமராஜரால், 4 டி.எம்.சி கொள்ளளவோடு கட்டப்பட்ட அமராவதி அணையானது, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகளின் நீர் தேவையை பூர்த்திசெய்வதோடு பல நூற்றுக்கணக்கான கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. தற்போது சிலந்தி ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு தடுப்பணை கட்டும் பணிகள் முறையான அனுமதி இல்லாமல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இரு மாநிலங்களுக்கு இடையிலான நதியின் குறுக்கே, எந்த ஒரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் ஒப்புதலின்றித் தன்னிச்சையாக எவ்வித அணையும் கட்டமுடியாது என்பதை உச்சநீதிமன்றம் பலமுறை தனது தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திர அரசுகள் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

அமராவதி அணையின் முக்கிய நீராதாரங்களாக கேரளா மாநிலத்தில் உள்ள பாம்பாறு, தேனாறு, சிலந்தி ஆறு மற்றும் சின்னாறு ஆகியவை உள்ளன. ஏற்கனவே பாம்பாற்றுக்கு வரும் தண்ணீரை மறித்து பட்டிசேரி அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து போனது. பருவமழை பெய்தால் மட்டுமே அணை நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமராவதி ஆற்றின் துணை நதியான சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், அமராவதி ஆறு முற்றிலும் வறண்டு லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாலைவனமாகும் சூழல் உள்ளது. பசுமை தீர்ப்பாயம் தாமாகவே முன்வந்து சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும் கேரள அரசு எந்த ஒரு முடிவையும் தெரிவிக்கவில்லை. எனவே தடுப்பணை கட்டும் திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Tags:    

Similar News