இந்தியா

மணிப்பூரில் நல்லிணக்கத்தை நிலைநாட்ட மத்திய அரசு முயற்சித்து வருகிறது.. அமித்ஷா பேட்டி

Published On 2024-05-26 10:47 GMT   |   Update On 2024-05-26 10:47 GMT
  • நேர்காணலில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் கலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
  • கலவரம் நடந்த மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரடியாக சென்று பாரக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இன்றளவும் அவர்மீது எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது.

பிரஸ் ட்ரஸ்ட் ஆப் இந்தியா செய்தி ஊடக நேர்காணலில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் கலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தேய் இனக் குழுக்களுக்கிடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் கடுமையான மோதல் ஏற்பட்டு கலவரம் நிகழ்ந்தது வருகிறது.

மெய்தேய்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதால் அவர்கள் தங்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வர் என்று குக்கி இனத்தவர் அஞ்சினர். மோதல் ஏற்பட இது முக்கிய காரணமாக அமைந்தது. இந்த கலவரத்தின்போது பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக நடத்திச்செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

 

 இதுவரை இந்த கலவரத்தில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மணிப்பூரில் கலவரம் இன்னும் ஓயாத நிலையில் ஏராளமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் மணிப்பூரில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. கலவரக்காரர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி போலீஸ் உதவியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.கலவரம் நடந்த மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரடியாக சென்று பாரக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இன்றளவும் அவர்மீது எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது.

 

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு இடையில் PTI செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அமித்ஷா, மணிப்பூரில் மெய்தேய் - குக்கி இனக்குழுக்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மத்தியில் உள்ள பாஜக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

 

தொடந்து பேசிய அவர், இதை மோதல் மற்றும் கலவரமாக மட்டும் பார்க்கக்கூடாது. இது இரண்டு இனக்குழுக்களுக்கு இடையிலான பிரச்சனை, இதற்கு வலுக்கட்டாயமாக எந்த ஒரு தீர்வையும் ஏற்படுத்த முடியாது. மிகவும் கவனமாக கையாள வேண்டிய பிரச்சனை இது. மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். 

 

Tags:    

Similar News