செய்திகள்
சித்தராமையா

எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதில் அரக்கனை போல் செயல்படும் மாநில அரசு: சித்தராமையா

Published On 2020-02-19 02:28 GMT   |   Update On 2020-02-19 02:28 GMT
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முழுவதுமாக சீர்குலைந்துவிட்டது. கர்நாடக அரசு எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதில் அரக்கனை போல் செயல்படுவதாக சித்தராமையா குற்றம்சாட்டினார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் அரங்கேறிய வன்முறை குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதுகுறித்து தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக அரசு எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதில் அரக்கனை போல் செயல்படுகிறது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முழுவதுமாக சீர்குலைந்துவிட்டது. இதை சரியாக நிர்வகிப்பதில் அரசு தோல்வி அடைந்துவிட்டது. சட்டசபையின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் உரையாற்றினார். அந்த உரையில் கர்நாடகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள், மங்களூருவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து குறிப்பிடவில்லை.

இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவது எங்களின் கடமை. ஏனென்றால் அந்த மக்களின் ஆதரவுடன் நாங்கள் இந்த சபைக்கு வந்துள்ளோம். குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசின் சட்டத்தை எதிர்க்கவும், அவை குறித்து கருத்து தெரிவிக்கவும் ஜனநாயகத்தில் அனைவருக்கும் உரிமை உள்ளது.

பெரும்பான்மை பலத்துடன் அரசு சட்டங்களை இயற்றினாலும், ஜனநாயக கட்டமைப்பில் அவற்றை எதிர்க்க முடியும். அந்த சட்டத்திற்கு எதிராக கருத்து கூறுபவர்களை மத்திய பா.ஜனதா அரசு தேச விரோத சட்டத்தில் கைது செய்கிறது. கர்நாடகத்தில் போலீசார் ஆளும் அரசியல் தலைவர்களின் கைப்பாவையாக செயல்படுகிறார்கள். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி யு.டி.காதர், மைசூருவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த மாணவி மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பா.ஜனதாவை சேர்ந்த அனந்த்குமார் ஹெக்டே எம்.பி., சோமசேகரரெட்டி எம்.எல்.சி. ஆகியோர் மீது அத்தகைய நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.
Tags:    

Similar News