தமிழ்நாடு

மருத்துவ முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலப்பு? ஊராட்சி செயலாளருக்கு நோட்டீஸ்

Published On 2024-04-27 03:43 GMT   |   Update On 2024-04-27 03:43 GMT
  • சம்பவம் தொடர்பாக கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் விஜயலட்சுமி, புதுக்கோட்டை டிஎஸ்பி ராகவி உள்ளிட்டோர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
  • வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையே மீண்டும் அப்படியொரு சம்பவம் அதே புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை அருகே சங்கம் விடுதி ஊராட்சி குருவாண்டான் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுகள் கலந்த நிலையில் நேற்று முன்தினம் மாட்டு சாணம் கலந்த குடிநீர் வந்ததாக தகவல் பரவியது.

தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பெரிய சாமி, பால்பிரான் சிஸ் ஆகியோர் அங்கு சென்று விசாரித்தனர். மேலும், அந்த குடிநீர் தொட்டி கழுவி சுத்தம் செய்யப்பட்டது. தொட்டியில் இருந்து மாதிரி சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆய்வு முடிவு வந்த பிறகே என்ன மாதிரியான கழிவு கலக்கப்பட்டது என்ற விவரம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் விஜயலட்சுமி, புதுக்கோட்டை டிஎஸ்பி ராகவி உள்ளிட்டோர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி மக்களுக்கு நேற்று லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மேலும், அங்கு வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்நிலையில், குடிநீர் தொட்டி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கழுவி சுத்தம் செய்யப்படவில்லை என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்ததைத் தொடர்ந்து, சங்கம் விடுதி ஊராட்சி செயலாளருக்கு விளக்கம் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

Tags:    

Similar News