தமிழ்நாடு

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு

Published On 2024-04-27 02:54 GMT   |   Update On 2024-04-27 02:54 GMT
  • விமானத்தில் ஏற்ற கொண்டு வரப்படும் பார்சல்கள் அனைத்தும் தீவிரமாக பரிசோதிக்கப்படுகின்றன.
  • டெல்லியில் இருந்து மறுஉத்தரவு வரும் வரையில் இந்த பாதுகாப்பு சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்படுகிறது.

மீனம்பாக்கம்:

கொல்கத்தா விமான நிலைய மேலாளருக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "கொல்கத்தா உள்பட 4 விமான நிலையங்களில் குண்டு வெடிக்கும்" என இந்தியில் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து, டெல்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு அவசரமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் விமான போக்குவரத்து பாதுகாப்பு துறை இணைந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவதோடு, பயணிகள் மற்றும் விமானங்களில் ஏற்றப்படும் பார்சல்கள் ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்து, பரிசோதிக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி சென்னை விமான நிலையத்திலும் நேற்று பிற்பகலில் இருந்து கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி வழக்கமாக சென்னை விமான நிலையத்தில் உள்ள 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், தற்போது 5 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் இருந்து, விமானங்களில் பயணிக்க வரும் அனைத்து பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து, சோதனைகள் நடத்திய பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். விமானத்தில் ஏற்ற கொண்டு வரப்படும் பார்சல்கள் அனைத்தும் தீவிரமாக பரிசோதிக்கப்படுகின்றன.

ஆனால் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் எந்தவிதமான வெடி பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் டெல்லியில் இருந்து மறுஉத்தரவு வரும் வரையில் இந்த பாதுகாப்பு சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்படுகிறது.

பயணிகளுக்கு கூடுதல் சோதனைகள் நடப்பதால், சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான பயணிகள், விமானம் புறப்படும் நேரத்துக்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச விமான பயணிகள் 3 மணி நேரம் முன்னதாகவும், விமான நிலையத்துக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News