காதல் திருமணத்தை பங்குச்சந்தையுடன் ஒப்பிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்
- குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என பெற்றோர்கள் படிக்க வைக்கிறார்கள்
- உங்கள் பெற்றோர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
மதுரை:
திருச்சியை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவர் சென்னையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த அந்த பெண் திடீரென மாயமாகி உள்ளார். பணிபுரியும் மருத்துவமனைக்கும் பெண் வராததால் அவருடைய பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் காணாமல் போன தனது மகளை ஆஜர்படுத்த கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், மாயமான பெண்ணை ஆஜார்படுத்த உத்தரவிட்டு வழக்கை இன்று ஒத்தி வைத்து இருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ஜோதிராமன் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த பெண் காணொளி காட்சி வாயிலாக ஆஜரானார். நீதிபதிகள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அந்தப்பெண் நான் உடன் பணி புரியும் மேற்கு வங்கத்தை சேர்ந்த நபருடன் திருமணம் செய்து கொண்டேன் என கூறினார்.
அதற்கு நீதிபதிகள் குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என பெற்றோர்கள் படிக்க வைக்கிறார்கள். காதலிக்க அல்ல. காதல் திருமணம் என்பது பங்குச்சந்தை போல ஏற்றமும் உண்டு இரக்கமும் உண்டு.
நீங்கள் விரும்பியவருடன் செல்வது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் உங்கள் பெற்றோர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நீங்கள் படித்தவர்கள், பெற்றோரிடம் முறையாக தகவல் தெரிவித்திருக்க வேண்டும். அவர்களை இப்படி நீதிமன்றம் வாயிலாகவா உங்களை காண செய்வது. உங்கள் பெற்றோரை சமாதானம் செய்திருக்கலாம்.
மேலும் தற்போதைய கால கட்டத்தை பெற்றோர்கள் அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்.
பின்னர் நீதிபதிகள் அந்த பெண்ணிடம், உங்கள் கணவருடன் சென்று உங்கள் பெற்றோரை சமாதானம் செய்யுங்கள் என அறிவுரை கூறினார். பின்னர் பெற்றோர்கள் நாங்கள் வயதானவர்கள் எங்களை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என கண்ணீர் வடித்தனர். தொடர்ந்து நீதிபதிகள், பெண் திருமணம் ஆகி அவர் கணவர் உடன் சென்று விட்டார் எனக் கூறி இந்த வழக்கை முடித்து வைத்தனர்.