இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தி.மு.க. அரசு காலில் போட்டு மிதிக்கிறது- எல்.முருகன்
- தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப இரண்டு வாரம் தான் உள்ளது.
- மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆர்.எஸ்.எஸ். குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
திருப்பரங்குன்றம்:
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருப்பரங்குன்றம் கோவில் சாமி இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கோவில் வாசலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் அதற்காக கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக முயற்சி எடுத்து வருகிறார்கள். கார்த்திகை தீபத்தின்போது பக்தர்கள் இங்கு வந்து முறையிடுவதும், அவர்களை கைது செய்து, அடைத்து வைப்பதும் என ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.
எனவே இது தொடர்பாக பக்தர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, உயர்நீதி மன்றம் அனுமதி கொடுத்த பிறகும் கூட தீபம் ஏற்ற முடியாத சூழல் இருப்பது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் எந்த அளவுக்கு அராஜகமும், அட்டூழியமும் நடைபெறுகிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம். சி.ஐ.எஸ்.எப். வீரர்களையும் அனுமதிக்க முடியாத அளவிற்கு தி.மு.க.வின் அரசாங்கமும், காவல் துறையும், ஸ்டாலினும் நடந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் கோபம் கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப இரண்டு வாரம் தான் உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தி.மு.க. அரசு காலில் போட்டு மிதிக்கிறார்கள். அம்பேத்கரை மதிக்காத அரசாங்கம் என்றால் அது தி.மு.க. அரசாங்கம் தான். தமிழக மக்கள் சரியான நேரத்தில் அவர்களுக்கு பாடத்தை புகட்டுவார்கள். பூரண சந்திரன் மரணத்திற்கு ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.
மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆர்.எஸ்.எஸ். குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மக்களுக்கு துரோகத்தை இழைத்து கொண்டிருப்பவர் திருமாவளவன். அறுபடை முருகனும் தமிழகத்தில் நடக்கும் அட்டூழியத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் இன்னும் இரண்டு மாதத்தில் பதில் கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், கதலி நரசிங்கம் பெருமாள், நிர்வாகிகள் ராஜரத்தினம், ராக்கப்பன், வேல்முருகன் உள்பட பலர் இருந்தனர்.