தி.மு.க.வுக்கு வாக்களிப்பவர்களுக்கே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறதா?- ஆர்.பி. உதயகுமார் கேள்வி
- இன்றைக்கு தமிழகத்தில் செவிலியர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் என தமிழகமே போராட்டக் களத்தில் உள்ளது.
- இன்றைக்கு ஊர் தோறும் கருணாநிதி சிலையை திறந்து கருணாநிதிக்கு விளம்பரம் செய்கிறார்கள்.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்றைக்கு தமிழக மக்களிடத்தில் நம்பிக்கை இழந்த அரசாக தி.மு.க. அரசு உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கடை தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து வருகிறார்கள்.
மக்கள் வரிப்பணத்தில் பாரபட்சத்துடன் திட்டங்களை ஸ்டாலின் அரசு செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள் ஆனால் தி.மு.க.வுக்கு வாக்களிக்க கூடிய கட்சிக்காரர்களுக்கு மட்டும் வரிப்பணத்தை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் திட்டங்களில் பாரபட்சம் இல்லாமல் வரிப்பணத்தை செலவு செய்வதுதான் அரசின் ஜனநாயக இலக்கணம்.
மக்கள் வரிப்பணத்தை கட்சிக்காரர்களுக்கும், தங்களுக்கு வாக்களிப்பவர்களுக்கும் மட்டும்தான் தேடி பார்த்து விதிகளை திருத்தி உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயை தி.மு.க. அரசு கொடுப்பதாக மக்களிடம் புகார் எழுந்துள்ளது.
இந்த திட்டத்தில் பாரபட்சமாக செயல்படுவதாக தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எண்ணத்துடன் மக்களைப் பற்றி சிந்திக்காமல் தேர்தலுக்காக திட்டங்களை விரிவுபடுத்தி ஸ்டாலின் அறிவிக்கிறார்.
இன்றைக்கு தமிழகத்தில் செவிலியர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் என தமிழகமே போராட்டக் களத்தில் உள்ளது. ஆனால் அவர்களை ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை. கடைக்கோடியில் திட்டங்களை சேர்க்க ஆர்வம் காட்டாமல், தி.மு.க.வின் மண்டல மாநாடு, மகளிர் மாநாடு, இளைஞர் மாநாடு என மாநாட்டு பந்தலுக்கு அக்கறை காட்டுகிறார்.
இன்றைக்கு ஊர் தோறும் கருணாநிதி சிலையை திறந்து கருணாநிதிக்கு விளம்பரம் செய்கிறார்கள். அதே போல் அரசின் திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை சூட்டி ஸ்டாலின் அழகு பார்க்கிறார். இன்றைக்கு கருணாநிதிக்கு விளம்பரம் தேடும் அரசாக உள்ளது. இப்படியே சென்றால் தமிழகம் கருணாநிதி குடும்பத்துக்கு சொந்தம் என்ற நிலையை உருவாக்குவார்கள் எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.