தமிழ்நாடு செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் முன்எச்சரிக்கையாக 25 ரவுடிகள் கைது- 1,345 ரவுடிகள் தீவிர கண்காணிப்பு

Published On 2025-12-30 14:59 IST   |   Update On 2025-12-30 14:59:00 IST
  • வண்ணார்பேட்டையில் 2 ஓட்டல்கள், சந்திப்பு பகுதியில் 2 ஓட்டல்களில் புத்தாண்டையொட்டி நள்ளிரவு கொண்டாட்டங்கள் நடக்கும்.
  • அதிக வழக்குகளில் கைதாகி தற்போது வெளியில் சுற்றித் திரியும் நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

நெல்லை:

ஆங்கில புத்தாண்டு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாதவாறு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நெல்லை மாநகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் இன்று இரவில் இருந்து நாளை மறுநாள் அதிகாலை வரையிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, வாகன சோதனை நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நெல்லை மாநகர பகுதியில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளனர். நாளை காலை முதல் 1-ந்தேதி இரவு வரையிலும் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும். விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், கே.டி.சி.நகர் மேம்பாலம், சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் உள்ளிட்ட இடங்களிலும் இளைஞர்கள் ரேஸ் செல்வதை தடுக்க ரோந்து நடத்தப்பட உள்ளது.

நெல்லை மாநகரில் வண்ணார்பேட்டையில் 2 ஓட்டல்கள், சந்திப்பு பகுதியில் 2 ஓட்டல்களில் புத்தாண்டையொட்டி நள்ளிரவு கொண்டாட்டங்கள் நடக்கும். இதனால் அங்கும் சோதனை நடத்தப்பட உள்ளது.

இதேபோல் மாவட்ட எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உத்தரவிட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் தீவிரமாக பரிசோதனை செய்து அனுப்பிட வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். புறநகர் பகுதிகளில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கூடங்குளம் அணுமின் நிலையம், காவல்கிணறு இஸ்ரோ ஆராய்ச்சி மையம் மற்றும் முக்கிய வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரில் புத்தாண்டையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்கள், அதிக வழக்குகளில் கைதாகி தற்போது வெளியில் சுற்றித் திரியும் நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதில் பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் உள்பட சில போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ள ரவுடிகள் 10 பேர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம் மாவட்டத்தில் இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். சுமார் 1,345 பேர் ரவுடிகள் பட்டியலில் உள்ள நிலையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில், அவர்களை அந்தந்த உட்கோட்டத்தில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டுகளின் மேற்பார்வையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் எனவும், அந்த ரவுடிகளால் அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என புகார்கள் வந்தால் உடனடியாக அவர்களை கைது செய்திடவும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.

Tags:    

Similar News