மாசடைந்த பகுதியாக அறிவிக்க கோரி திருப்பூர் முதலிபாளையம் மக்கள் போராட்டம்
- திருப்பூர் குமரன் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- கைக்குழந்தையுடன் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமான குப்பைகளை முதலிபாளையம் பகுதியில் உள்ள செயல்படாத கல்குவாரி பாறைக்குழியில் மாநகராட்சி கொட்டி வந்தது.
இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் , விவசாயம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். எனவே சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட முதலிபாளையம் பகுதியை மாசுபட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்,
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், கழிவு மேலாண்மை தொடர்பான புதிய முன்னெடுப்புகளை செய்யக்கூடாது என வலியுறுத்தி முதலிபாளையம்- நல்லூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு சார்பில் விவசாயிகள் திருப்பூர் குமரன் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நோய்வாய்ப்பட்டு விளைச்சல் பாதித்த பாகற்காய், காய்கறி, மஞ்சள் கிழங்கு, தென்னை மற்றும் மாசடைந்த நீர் உள்ளிட்டவற்றை மாலையாக அணிந்து பங்கேற்றனர். கைக்குழந்தையுடன் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோஷங்கள் எழுப்பி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.