செய்திகள்
ரவிசங்கர் பிரசாத்

ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - ரவிசங்கர் பிரசாத்

Published On 2019-11-14 10:16 GMT   |   Update On 2019-11-14 10:16 GMT
ரபேல் விவகாரத்தில் தொடர்ந்து பொய் சொல்லி வந்த காங்கிரஸ் கட்சி, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:

ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், ரபேல் போர் விமான ஒப்பந்த நடைமுறையில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை. முறைகேடு நடந்ததாக கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறியது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கியது.

அதில், ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கூறிய கோர்ட், முந்தைய தீர்ப்பை உறுதிசெய்தது. மேலும், சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

இந்நிலையில், ரபேல் விவகாரத்தில் தொடர்ந்து பொய் சொல்லி வந்த காங்கிரஸ் கட்சி, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி பொய் சொல்லியுள்ளார். அவரது குற்றச்சாட்டுகளை பிரான்ஸ் அதிபர் மேக்ரான்கூட நிராகரித்துள்ளார். அரசின் வெளிப்படை தன்மையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. ரபேல் போர் விமானங்களின் விலை குறித்து ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்தினார். ஒவ்வொரு கூட்டத்திலும் விமானங்கள் குறித்து பொய் சொல்லி வந்தார். பொய் சொன்னதற்காக அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News