search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SC"

    • திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 3 பேரையும் இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது.
    • திருச்சியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வேனில் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.

    திருச்சி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேரை கடந்த ஆண்டு விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்களில் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட்பயஸ் ஆகிய 4 பேரும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

    கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறப்பு முகாமில் இருந்த அவர்கள் 4 பேரும் தங்களை முகாமில் இருந்து விடுவித்து இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தனர். இதில் சாந்தன் இலங்கைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அவர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, திடீரென இறந்தார். இதையடுத்து அவரது உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தொடர்ந்து திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 3 பேரையும் இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது. தற்போது அவர்களை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, நேற்று இரவு 3 பேரும் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்கள் திருச்சியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வேனில் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.

    பின்பு அங்கிருந்து இன்று (புதன்கிழமை) காலை இலங்கை விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 33 ஆண்டுக்கு பிறகு அவர்கள் சொந்த நாட்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சம்மனை எதிர்த்து தமிழக அரசு மற்றும் கலெக்டர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    • வழக்கு விசாரணையை மே மாதம் 6-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு மணல் அள்ளப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதில் கிடைத்த வருமானத்தில் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடந்ததாக கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

    மேலும் கடந்த செப்டம்பர் மாதம் சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அதற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளிலும் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள், ரொக்கப்பணம் உள்ளிட்டவைகள் சிக்கியது.

    இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி வேலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தமிழக அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

    இந்த சம்மனை எதிர்த்து தமிழக அரசு மற்றும் கலெக்டர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை விதித்தது. இருப்பினும் விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என உத்தரவிட்டது.

    சம்மனுக்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மற்றும் கலெக்டர்கள் சார்பிலும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

    இது தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை எதுவும் விதிக்க முடியாது. இந்த வழக்கு முக்கியமானது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதால் குறிப்பிட்ட தேதியில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் கண்டிப்பாக அமலாக்கத்துறை முன்பு ஆஜராக வேண்டும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    இதற்கு தமிழக அரசு சார்பில் தற்போது மாவட்ட கலெக்டர்கள் தேர்தல் நடவடிக்கை தொடர்பான பணிகளில் ஈடுபட்டு இருப்பதால் அவர்கள் ஆஜராகும் பட்சத்தில் தேர்தல் பணி பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு வருகிற ஏப்ரல் மாதம் 25-ந்தேதி அமலாக்கத்துறை முன்பு 5 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை மே மாதம் 6-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுபடி வருகிற 25-ந்தேதி மணல் கொள்ளை வழக்கு சம்பந்தமாக கலெக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
    • வருகிற 29-ந்தேதிக்குள் அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

    புதுடெல்லி:

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டன.

    இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடந்த பிப்ரவரி 28-ந்தேதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் செந்தில் பாலாஜி 8 மாதங்களாக சிறையில் இருப்பதால் அவர் மீதான வழக்கு விசாரணையை 3 மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவில், 'செந்தில் பாலாஜி 280 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் நாள்தோறும் விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பைபாஸ் சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜி உடல் பரிசோதனை செய்து வருகிறார்.

    அவருக்கு ஜாமீன் வழங்க எந்தவொரு நிபந்தனையையும் ஏற்க தயார். விசாரணைக்கு ஒத்துழைக்கவும் தயார்' என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வக்கீல், ஆஜராகி, 'இந்த மேல்முறையீடு மனுவை பரிசீலிக்க வேண்டும்' என தெரிவித்தார். இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வருகிற 29-ந்தேதிக்குள் அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    மேலும் கீழமை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் முறையிடப்பட்டது. அந்த விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

    • கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
    • பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை.

    புதுடெல்லி:

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.

    இதன் காரணமாக திருக்கோவிலூர் தொகுதி காலியிடம் என்று தேர்தல் கமிஷனில் அறிவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்பட்டு விட்டது.

    பொன்முடி எம்.எல்.ஏ.வாக வந்துள்ள நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்க முடிவு செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கவர்னர் ஆர்.என்.ரவி, இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அழைப்பு விடுக்கவில்லை.

    இந்நிலையில் பொன்முடி அமைச்சர் பதவி விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

    முதலமைச்சரின் பரிந்துரைப்படி பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மனுவை உடனடியாக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

    பொன்முடி பதவி ஏற்பு விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக, அமைச்சராக நியமிக்கப்படுபவரின் தகுதிப்பாடு குறித்த முதலமைச்சரின் மதிப்பீட்டை கவர்னர் கேள்வி எழுப்ப முடியாது என்றும் தமிழக அரசுடன் கவர்னர் கடைப்பிடிக்கும் மோதல் போக்கு கொஞ்சமும் வியப்பளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

    • ஷேக் ஷாஜகான் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இந்த விவகாரத்தை கொல்கத்தா ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்து வந்தவர் ஷேக் ஷாஜகான்.

    இவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பொதுமக்களின் நிலங்களை அபகரித்ததாகவும், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் புகார் எழுந்தது. இதனால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த விவகாரத்தை கொல்கத்தா ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. பின்னர் ஷாஜகான் மற்றும் அவரது உதவியாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஷேக் ஷாஜகானுக்கு எதிராக அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.

    ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றபோது அவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அவரை கைது செய்துள்ளதாக மேற்கு வங்காள போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு மேற்கு வங்காள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மாநில போலீசார் முற்றிலும் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்கள். எனவே வழக்கை சி.பி.ஐ. யிடம் ஒப்படைக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

    மேலும் ஷாஜகானின் காவலையும், வழக்கு தொடர்பான பொருட்களையும் மாலை 4.30 மணிக்குள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் மேற்கு வங்காள போலீஸ் தலைமை அலுவலகத்திற்குச் சென்று வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி ஷேக் ஷாஜகானை தங்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தினர்.

    ஆனால் மேற்கு வங்காள போலீசார் அவரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளதாகவும், அதன் தீர்ப்பு வரும் வரை ஷேக் ஷாஜகானை ஒப்படைக்க மாட்டோம் என தெரிவித்தனர். இதனால் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்காள அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் அவசர மனுவாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

    • தேர்தல் பத்திர திட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
    • தேர்தல் பத்திரம் வினியோகத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கிக்கு உத்தரவிட்டது.

    புதுடெல்லி:

    தேர்தல் பத்திர திட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் சிறப்புவாய்ந்த தீர்ப்பை வழங்கியது.

    மேலும், ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் பத்திரம் மூலமாக பெற்றுள்ள தொகை குறித்த விவரத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் மார்ச் 31-ம் தேதிக்குள் தனது இணைய தளத்தில் அந்த விவரங்களை வெளியிட வேண்டும் என்றும், தேர்தல் பத்திரம் வினியோகத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்க்கட்சிகள் வரவேற்றன.

    இதற்கிடையே, தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.பி.ஐ. வங்கி வேண்டுகோள் வைத்துள்ளது.

    இந்நிலையில், அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, எஸ்.பி.ஐ. வங்கி லோகோவில் பிரதமர் மோடி தெரிவது போல் எக்ஸ் தளத்தில் எஸ்.பி.ஐ. யாரை காப்பாற்ற நினைக்கிறது என கேள்வி எழுப்பி படம் வெளியிட்டது வைரலாகி வருகிறது.

    • பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
    • தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. நவீன மருந்துகளுக்கு எதிராக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விளம்பரம் செய்து வந்தது.

    இதற்கிடையே, பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அலோபதி மருந்துகளை குறிவைத்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது.

    தவறான விளம்பரங்கள் நீடித்தால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி பதஞ்சலி நிறுவனம் அலோபதி மருந்துகளுக்கு எதிராக விளம்பரங்களை வெளியிடுவதாக இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பதஞ்சலி நிறுவனத்துக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்ததுடன், பதஞ்சலி நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.
    • சண்டிகர் மேயர் தேர்தலில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சட்டத்தின் கலங்கரை விளக்கம் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

    புதுடெல்லி:

    சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான 8 ஓட்டுகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்த ஓட்டுக்கள் அனைத்தும் செல்லும் என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.

    இந்நிலையில், சண்டிகர் மேயர் தேர்தலில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சட்டத்தின் கலங்கரை விளக்கம் என முதலமைச்சர் முகஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மேலும், சட்டப்பிரிவு 142-ன் கீழ் அரிதான அதிகாரத்தைப் பயன்படுத்தி நியாயத்தை சுப்ரீம் கோர்ட் நிலைநிறுத்தியுள்ளது.

    ஒருமைப்பாடு, ஜனநாயகக் கொள்கைகளுக்கான இந்த வெற்றி இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு மகத்தான செய்தி.

    2024 தேர்தலுக்கு முன் பாஜகவின் சூழ்ச்சித் தந்திரங்களுக்கு முன் எச்சரிக்கையை அனுப்பியுள்ளது சுப்ரீம் கோர்ட் என தெரிவித்துள்ளார்.

    • சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.
    • ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான 8 ஓட்டுகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்த ஓட்டுக்கள் அனைத்தும் செல்லும் என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.

    இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பின் மூலம் பா.ஜ.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. சிக்கலான நேரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. மட்டுமின்றி மத்திய அரசின் செயல்பாட்டையும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அம்பலப்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பு பா.ஜ.க.விற்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என தெரிவித்துள்ளார்.

    • காலி ஆம்னி பஸ்களை மாநகரத்துக்குள் எடுத்துச்செல்ல அனுமதிக்கும் அதே வேளையில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்கவில்லை.
    • இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது.

    புதுடெல்லி:

    தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், 'தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ஆம்னி பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்து துறை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே அரசு உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.

    இந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்து, அப்போது ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் பாலாஜி சீனிவாசன், 'போக்குவரத்து சட்ட விதிகளுக்கு எதிராக இத்திட்டம் அமைந்துள்ளது. காலி ஆம்னி பஸ்களை மாநகரத்துக்குள் எடுத்துச்செல்ல அனுமதிக்கும் அதே வேளையில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்கவில்லை. பயணிகளுக்கு பல்வேறு சங்கடங்கள் ஏற்பட்டுள்ளன' என வாதிட்டார்.

    இதற்கு நீதிபதிகள் 'பயணிகள் யாரும் தங்கள் சங்கடங்கள் குறித்து வழக்கு தாக்கல் செய்யவில்லையே, அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகதான் தோன்றுகிறது' என தெரிவித்தனர்.

    மேலும் இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் உள்ளார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டது.

    சென்னை:

    கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது, போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணி வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோடு, அவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் செந்தில்பாலாஜி மீது 3 குற்ற வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இதே விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை 2021-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

    இந்த கைது நடவடிக்கையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட அவருக்கு அங்கு 'பைபாஸ்' அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். அமைச்சரை நீக்கும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். மேலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்றும் அவர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி வகித்து வந்த அரசு துறைகள், வெவ்வேறு அமைச்சருக்கு மாற்றி வழங்கப்பட்டன.

    அதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்த உத்தரவை கவர்னர் நிறுத்திவைத்தார்.

    தற்போது, செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ளார். மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்யுமாறு செந்தில் பாலாஜிக்கு கோர்ட்டு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரனையின்போது ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், அவரால் மக்களுக்கு என்ன பிரயோஜனம் என்று கேள்வி எழுப்பியது.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டது. அதில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

    இந்த கடிதம், நேற்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட நிலையில், செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை கவர்னர் ஆர்.என்.ரவி. ஏற்றுக்கொண்டார்.

    முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்பதாக கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.

     

    • ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 184 இடங்களில் 98 இடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் மந்திரி தெரிவித்தார்.
    • பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்தப் புதிய வழிகாட்டு விதிகளை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    "உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால் அவற்றைப் பொதுப் பிரிவினருக்கான இடங்களாக மாற்றி மற்ற பிரிவினரைக் கொண்டு நிரப்பிக் கொள்ளலாம்" என்று பல்கலைக்கழக மானியக்குழு புதிய வழிகாட்டு விதிகளை உருவாக்கியுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பல்லாயிரக்கணக்கான பணி இடங்களை நிரப்பாமல் காலியாக வைத்திருந்தார்கள். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 12.12.2022 அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்குப் பதில் அளித்த ஒன்றிய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் "பின்னடைவு காலிப் பணியிடங்களையெல்லாம் உடனடியாக நிரப்புமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும், இதற்காகக் கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு மாதந்தோறும் அது ஆய்வு செய்கிறது என்றும்; 2019-ம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்கள் ( ஆசிரியர் இட ஒதுக்கீடு) சட்டம் 2019 நடைமுறைக்கு வந்ததற்குப் பிறகு இட ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்தவொரு பணியிடமும் பொதுப் பிரிவுக்கு மாற்றப்படவில்லை என்றும் பதிலளித்திருந்தார்.

    அதுமட்டுமின்றி, மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்.சி. பிரிவினருக்கென ரிசர்வ் செய்யப்பட்ட 307 பேராசிரியர் பதவிகளில் 231 இடங்களும்; 620 இணைப் பேராசிரியர் பதவிகளில் 401 இடங்களும்; 1,357 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 276 இடங்களு ம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன என்றும்; எஸ்.டி. பிரிவினருக்கு அது போலவே 123 பேராசிரியர், 232 இணைப்பேராசிரியர் மற்றும் 188 உதவிப்பேராசிரியர் பதவிகள் காலியாக உள்ளன என்றும் தெரிவித்தார்.

    ஓ.பி.சி. பிரிவினருக்கு 367 பேராசிரியர் பதவிகளில் 311 இடங்களும்; 752 இணைப்பேராசிரியர் பதவிகளில் 576 இடங்களும்; 2332 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 672 இடங்களும் நிரப்பப்படவில்லை என்றும், ஐ.ஐ.டி.-களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கென ஒதுக்கப்பட்ட 11,170 ஆசிரியர் பதவிகளில் 4,502 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன என்றும், ஐ.ஐ.எம்.களில் எஸ்.சி. பிரிவினருக்கு ரிசர்வ் செய்யப்பட்ட 97 பதவிகளில் 53 இடங்களும் எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 40 பதவிகளில் 34 இடங்கள் நிரப்பப்படவில்லை. ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 184 இடங்களில் 98 இடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் மந்திரி தெரிவித்தார்.

    நாடாளுமன்றத்தில் இவ்வாறு பதிலளித்துவிட்டு இப்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினரின் இட ஒதுக்கீட்டையே ஒழித்துக் கட்டுவதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.

    அதன் அடிப்படையிலேயே, இப்போது பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டு விதிகளை வகுத்திருக்கிறது. பார்ப்பனர் அல்லாதார் அனைவரையும் தற்குறிகளாக மாற்ற முயற்சிக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்தப் புதிய வழிகாட்டு விதிகளை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். இதனை வலியுறுத்தி அனைத்து ஜனநாயக சக்திகளும் களமிறங்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×