search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு கருத்து
    X

    கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு கருத்து

    • இந்த பொதுநல மனு அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது.
    • தமிழக அரசின் கருத்தை மனுவாக தாக்கல் செய்யுங்கள்.

    புதுடெல்லி :

    பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து செய்யும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அறிவிக்க கோரி பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வினி உபாத்தியாயா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரவிந்த் தத்தர், கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோரை தண்டிக்க இந்திய தண்டனைச் சட்டத்தில் இடமில்லை என வாதிட்டார்.

    தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், இந்த விவகாரத்தை மாநில சட்டப்பேரவையிடம் விட்டுவிட வேண்டும். மனுதாரர் பா.ஜ.க.வை சேர்ந்தவர் என்பதால், இந்த பொதுநல மனு அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. மனுதாரருக்கு எதிராக தேசத்துரோக குற்றச்சாட்டு இருக்கிறது என வாதிட்டார்.

    அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்துக்கு அரசியல்சாயம் பூச வேண்டாம். தமிழக அரசின் கருத்தை மனுவாக தாக்கல் செய்யுங்கள். மனுதாரர் பா.ஜ.க.வை சேர்ந்தவராக இருந்தாலும், இந்த விவகாரத்தை தொடர்ந்து விசாரிக்க விரும்புகிறோம் என தெளிவுபடுத்தினர்.

    அப்போது மீண்டும் வக்கீல் வில்சன், தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை. மனுதாரர் தவறான தகவலை தெரிவித்துள்ளார் என்றார்.

    அதற்கு நீதிபதிகள், இதுபோன்று வாதங்களை மறுத்து வாதிட பல காரணங்கள் இருக்கலாம். கோர்ட்டு விசாரணையை வேறு எதுவாகவும் மாற்றிவிட வேண்டாம். குறிப்பிட்ட மாநிலத்தில் நடைபெறும் கட்டாய மதமாற்ற புகார் குறித்து கவலைகொள்ளாது, ஒட்டுமொத்த நாட்டிலும் கட்டாய மதமாற்ற புகார் பற்றி கவலைகொள்கிறோம். ஒரு மாநிலத்தை மட்டும் குறிவைப்பதாக நினைத்து அரசியலாக்க வேண்டாம் என்றனர்.

    மேலும், கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான விவகாரம் என்பதால், சுப்ரீம் கோர்ட்டுக்கு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் உதவ வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    அப்போது மூத்த வக்கீல், வழக்கின் தலைப்பை மாற்ற வேண்டும் என்ற யோசனை தெரிவித்தார்.

    அதையும் சுப்ரீம் கோர்ட்டு ஏற்று, கட்டாய மதமாற்ற புகார்கள் குறித்து தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு என மாற்றியது. மேலும், இந்த பொதுநல மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்து, விசாரணையை பிப்ரவரி 7-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.

    Next Story
    ×