செய்திகள்

மே மாதத்தில் ஒரு லட்சத்து 289 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல்

Published On 2019-06-01 13:13 GMT   |   Update On 2019-06-01 13:13 GMT
மே மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 289 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக, நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை கடந்த 2016-ம்ஆண்டு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது.
இதன் மூலம் ஒரே பொருட்களுக்கு பல்வேறு இடங்களில் வரி விதிக்கப்படும் நிலை மாறி, ஒரே வரியாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருட்களின் விலையும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டபோது அரசுக்கு மாத வருவாய் சராசரியாக ரூ.98 ஆயிரத்து 114 கோடியாக இருந்தது. பின்னர், கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், வரி வருவாயும் மெல்ல மெல்ல அதிகரித்தபடி இருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 865 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. மூலம் மத்திய அரசுக்கு கிடைத்தது. இதுவே ஒரு மாதத்தில் அதிகபட்ச வரி வசூல் ஆகும்.

இந்நிலையில், மே மாத ஜிஎஸ்டி வரி வருவாய் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. அதில், மே மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 289 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக, நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் சிஜிஎஸ்டி ரூ.17,811 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.24,462 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.49,891 கோடி (இறக்குமதி வரி ரூ.24,875 உள்பட) வசூலாகி உள்ளது. செஸ் வரி மூலம் 8 ஆயிரத்து 125 கோடி ரூபாய் (இறக்குமதி வரி ரூ.953 கோடி உள்பட)  வருவாய் கிடைத்திருக்கிறது.
Tags:    

Similar News