செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாது - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்

Published On 2019-05-04 07:12 GMT   |   Update On 2019-05-04 09:01 GMT
உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. #SC #TNGovt #Elections2019
புதுடெல்லி:

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைந்தது.

எனவே மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்தது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அப்போது தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்க கோரி தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதித்து உத்தரவிட்டது. அதன் பின்னர் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் வார்டு வரையறை செய்து வருவதாகவும், அதன் பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதுபோன்ற காரணங்களால் தேர்தல் தொடர்ந்து தள்ளிப் போனது. தனி அதிகாரிகளின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. சமீபத்தில் வழக்கு தொடர்ந்தது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இன்னும் 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டுமானால் அதற்கு முன்னதாக வாக்காளர் பட்டியலை முழுமையாக தயார் செய்ய வேண்டி உள்ளது. இன்னமும் வாக்காளர் பட்டியல் சரி பார்க்கப்படவில்லை.

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து வாக்காளர் பட்டியல் வர வேண்டும். ஆனால் இதுவரை மாநில தேர்தல் ஆணையம் தலைமை தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலை பெறவில்லை.

தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் வாக்காளர் பட்டியலை பெற முடியவில்லை.

எனவே தற்போதுதமிழ் நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது. மேலும் உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரி தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கு உள் நோக்கம் கொண்டது.

என்றாலும் தேர்தலை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #SC #TNGovt #Elections2019
Tags:    

Similar News