செய்திகள்

ரபேல் விசாரணை தொடங்கினால் மோடியும், அனில் அம்பானியும் சிக்குவார்கள்- ராகுல்காந்தி பேச்சு

Published On 2018-11-15 10:36 GMT   |   Update On 2018-11-15 10:36 GMT
ரபேல் விவகாரம் குறித்து எப்போது விசாரணை தொடங்குகிறதோ அப்போதே பிரதமர் மோடி, அனில் அம்பானியின் பெயர்கள் வெளிவர தொடங்கும் என்று ராகுல் காந்தி பேசினார். #rahulgandhi #pmmodi #rafale #anilambani

கபிர்தாம்:

சத்தீஸ்கர் மாநில சட்ட சபைக்கு 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி தீவிர பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு ரபேல் விமானங்களை வாங்குவதற்கு விலை ரூ.526 கோடி என்று நிர்ணயித்தது. ஆனால் தற்போது ஆளும் பா.ஜனதா கூட்டணி அரசு அந்த விமானங்களை ரூ.1600 கோடி கொடுத்து வாங்குகிறது.

ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து சி.பி.ஐ. இயக்குனர் அஸ்தானா விசாரணையை தொடங்கினார். இதையடுத்து அவரை பிரதமர் நள்ளிரவில் பதவி நீக்கம் செய்து விட்டார்.

இந்த விவகாரம் குறித்து எப்போது விசாரணை தொடங்குகிறதோ அப்போதே பிரதமர் மோடி, அனில் அம்பானியின் பெயர்கள் வெளிவர தொடங்கும். 58 ஆயிரத்து 800 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெயரை டஸால்ட் நிறுவனத்திடம் பரிந்துரை செய்தது பிரதமர்தான்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான் நாட்டில் நடைபெற்ற ஊழல்களிலேயே மிகப்பெரியது. இதனால் பாதிக்கப்பட்டது ஏழைகள்தான். கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் பணக்காரர்கள் பாதிக்கப்படவில்லை.

பிரதமர் மோடி ஊழல்வாதி. பனாமா ஆவணங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சத்தீஸ்கர் முதல்- மந்திரி ரமன்சிங், அவருடைய மகன் அபிஷேக் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. சத்தீஸ்கருக்கும், எங்கள் குடும்பத்துக்கும் நீண்ட நாள் தொடர்பு உண்டு.


இந்த உறவு அன்பு சம்பந்தப்பட்டது. அரசியல் சம்பந்தமானது அல்ல. நீர்வளம், வனவளம், சுரங்கம், கனிமங்கள் ஆகியவற்றை கொண்டு பார்த்தால் சத்தீஸ்கர் பணக்கார மாநிலம்.

ஆனால் இங்குள்ள மக்கள் ஏழைகளாகவே உள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்காக ஏழை மக்கள் வியர்வையையும், ரத்தத்தையும் சிந்தி உழைக்கிறார்கள். இதை பிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை. அவரது ஆணவம்தான் இதற்கு காரணம்.

பா.ஜனதா அரசு விவசாயிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக அரசு நிலங்களை அபகரிக்கிறது. காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளிடம் உள்ள நிலங்களை எடுக்காது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களின் அரசை ஏற்படுத்துவோம்.

இந்தியா இப்போது 2 பிரிவாக உள்ளது. இதில் ஒரு இந்தியா அனில் அம்பானி, மெஹுல் சோக்சி, நீரவ்மோடி, விஜய் மல்லையா போன்றோரை கொண்டது. மற்றொரு இந்தியா நீங்கள், நான், விவசாயிகள், தொழிலாளர்களை கொண்டது. இதுபோல் 2 பிரிவுகளை கொண்ட இந்தியா நமக்கு தேவை இல்லை. நமக்கு இருப்பது ஒரு தேசிய கொடி. அதுபோல் நாடும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். #rahulgandhi #pmmodi #rafale #anilambani

Tags:    

Similar News