செய்திகள்

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி - முதல்வர் குமாரசாமி, சித்தராமையா அவசர ஆலோசனை

Published On 2018-09-21 22:06 GMT   |   Update On 2018-09-21 22:06 GMT
20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியதை தொடர்ந்து முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையா அவசர ஆலோசனை நடத்தினர். இருவரும் கூட்டணி ஆட்சியை காப்பாற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதித்தனர். #Karnataka
பெங்களூரு

கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி கடந்த மே மாதம் பொறுப்பேற்றார். இந்த ஆட்சி அமைந்து சுமார் 4 மாதங்கள் ஆகின்றன. இந்த நிலையில் கர்நாடக அரசியலில் புயல் வீசத்தொடங்கியுள்ளது.

பெலகாவி மாவட்ட காங்கிரஸ் விவகாரங்களில் மந்திரி டி.கே.சிவக்குமார் தலையிடுவதாக கூறி ஜார்கிகோளி சகோதரர்கள் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். பெலகாவி மாவட்ட காங்கிரஸ் பிரச்சினையில் மந்திரி டி.கே.சிவக்குமார் தலையிடக்கூடாது, லட்சுமி ஹெப்பால்கருக்கு மந்திரி பதவி வழங்கக்கூடாது என்று ஜார்கிகோளி சகோதரர்கள் நிபந்தனை விதித்தனர்.

இதனால் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் எழுந்தது. அதைத் தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, கட்சியில் எழுந்துள்ள கருத்துவேறுபாடுகளை சரிசெய்யும்படி அவர்களுக்கு ராகுல் காந்தி உத்தரவிட்டார்.

ஜார்கிகோளி சகோதரர்களை முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா சமாதானப்படுத்தினார். இந்த பிரச்சினை முடிந்துவிட்டதாக ஜார்கிகோளி சகோதரர்கள் அறிவித்தனர். ஆயினும் பா.ஜனதாவின் ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் காங்கிரசை சேர்ந்த சுமார் 20 எம்.எல்.ஏ.க்களை இழுக்க பேசி இருப்பதாகவும், விரைவில் அந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், அதன் பிறகு அவர்கள் மும்பை செல்ல முடிவு செய்திருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் கர்நாடகத்தில் நடைபெற்று வரும் கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமியும், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினர்.


இந்த ஆலோசனை சித்தராமையா தங்கியுள்ள காவேரி இல்லத்தில் நடந்தது. அப்போது துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரை திட்டத்தை எப்படி முறியடிப்பது, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு தாவாமல் பாதுகாப்பது, கூட்டணி ஆட்சியை காப்பாற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும் பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபட்டு எம்.எல்.ஏ.க்களை இழுத்தால், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்கலாமா? என்பது குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையே காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் நோக்கத்தில் பா.ஜனதாவினர் குதிரை பேரத்தில் ஈடுபட முயற்சி செய்வதை தடுக்க கோரி சட்டசபை சபாநாயகரிடம் மனு கொடுக்க ஜனதா தளம் (எஸ்) கட்சி முடிவு செய்துள்ளது.

மேலும் கடைசி நாள் வரை மேல்-சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பது வேண்டாம் என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தால், அதன் மூலம் கட்சியில் எதிர்ப்பு குரல் எழ வாய்ப்பு இருப்பதால், அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. #Karnataka #KarnatakaPolitics #Kumaraswamy #Siddaramaiah
Tags:    

Similar News