செய்திகள்

டெல்லியில் அடுத்த கோடைக் காலத்தில் தண்ணீர் பிரச்சனை இருக்காது - அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2018-06-11 04:23 GMT   |   Update On 2018-06-11 04:23 GMT
ஒவ்வொரு ஆண்டும் கோடையில் டெல்லியில் கடுமையான நீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அடுத்த ஆண்டு கோடை காலத்தில் தண்ணீர் பிரச்சனை இருக்காது என டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். #ArvindKejriwal
புதுடெல்லி:

டெல்லியின் தெற்கு பகுதியில் புதிய துணை மின்நிலையத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தனை வருடங்களாக மக்கள் அவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெறுவதற்கு அரசு அலுவலகங்களில் காத்திருந்து, லஞ்சம் கொடுத்து வாங்கி வந்துள்ளதாகவும், இனி சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளே மக்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று சான்றிதழ்களை வழங்க வழிசெய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த திட்டம் குறித்து டெல்லி கவர்னர் அனில் பாய்ஜாலை நாளை நேரில் சந்தித்து பேச இருப்பதாகவும் டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும் எனவும், அதற்கு மக்களும் சிறிது பொறுமையுடன் இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், டெல்லியின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாட்டை  போக்க பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாகவும், அடுத்த வருட கோடைக்காலத்தில் டெல்லியில் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். #ArvindKejriwal
Tags:    

Similar News