செய்திகள்
திருப்பதி அலிபிரி டோல்கேட்டில் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டிய தெலுங்கு தேசம் கட்சியினர்.

அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த தெலுங்கு தேசம் கட்சியினர்

Published On 2018-05-11 09:28 GMT   |   Update On 2018-05-11 09:28 GMT
திருப்பதியில் தரிசனத்துக்கு வந்த அமித்ஷாவுக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கருப்பு கொடி காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #BJP #Amitshah
திருமலை:

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் பா.ஜ.க. மத்திய அரசை கண்டித்து தெலுங்கு தேச கட்சியினர் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அமித்ஷா ஏழுமலையானை தரிசனம் செய்ய நேற்றிரவு திருமலைக்கு வந்தார். அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

இன்று காலை10 மணிக்கு சாமி தரிசனம் செய்தார். அமித்ஷாவிற்கு கோவில் அதிகாரிகள் அனில்குமார் சிங்கால், சீனிவாச ராஜூ ரங்கநாயகி மண்டபத்தில் வைத்து தீர்த்த பிரசாதம் மற்றும் சாமி படம், வழங்கினர். இதையடுத்து காரில் அமித்ஷா திருப்பதிக்கு திரும்பினார்.

சாமி தரிசனம் செய்த அமித்ஷாவுக்கு சாமிபட பிரசாதம் வழங்கிய காட்சி.

அமித்ஷா திருப்பதிக்கு வந்த தகவல் தெலுங்கு தேச கட்சியினருக்கு தெரியவந்தது.

தனி அந்தஸ்து வழங்காததால் ஆத்திரத்தில் இருந்த தெலுங்கு தேச கட்சியினர் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்ட முடிவு செய்தனர். அலிபிரி டோல்கேட்டில் திருப்பதி எம்.எல்.ஏ. சுகுணா, தெலுங்கு தேச கட்சி நிர்வாகி தம்புதி பாஸ்கரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். தகவல் தெரிந்து ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

அமித்ஷா அலிபிரிக்கு வந்ததும் அவர்கள் கருப்பு கொடி காட்டினர். அப்போது பா.ஜ.க.வினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் பா.ஜ.கவினரும் தெலுங்கு தேச கட்சியினரும் மோதிக்கொண்டனர்.

அமித்ஷா கண் முன்னாடியே பா.ஜ.க.வினர் தாக்கப்பட்டனர். மோதலை சமாளிக்க போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனால் திருப்பதி அலிபிரி டோல்கேட் பகுதி போர்களம் போல் காட்சியளித்தது. இந்த சம்பவங்களால் திருப்பதிக்கு வந்த பக்தர்கள் அவதியடைந்தனர். #BJP #Amitshah
Tags:    

Similar News