செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது மிகப்பெரிய தவறு - சுப்பிரமணிய சாமி

Published On 2017-12-22 09:33 GMT   |   Update On 2017-12-22 09:33 GMT
ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்காவின் முடிவை நிராகரிக்கும் ஐ.நா தீர்மானத்தில் அந்நாட்டுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது மிகப்பெரிய தவறு என சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகரமாக அங்கீகரிப்பதாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 6-ந்தேதி அறிவித்தார். அதை தொடர்ந்து பாலஸ்தீனத்தில் போராட்டமும், மோதலும் வெடித்தது. இதில் 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்தன. ஐ.நா பாதுகாப்பு சபை டிரம்ப்பின் முடிவை ஏற்க முடியாது என நிராகரித்தது. இதனையடுத்து, அமெரிக்கா தனது முடிவை திரும்ப பெற வேண்டும் என பாதுகாப்பு சபையில் எகிப்து ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது.

இந்த தீர்மானத்தை அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஆதரித்தன. இதேபோல், பாலஸ்தீனம், ரஷியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து பேசினர். இருப்பினும் அமெரிக்கா தனது ‘வீட்டோ’ (வெட்டுரிமை) அதிகாரத்தால் இந்த தீர்மானத்தை நிராகரித்தது.

இதையடுத்து, ஜெருசலேம் விவகாரம் குறித்து விவாதிக்க ஐ.நா. பொதுச்சபை நேற்று கூடியது. அப்போது டிரம்ப் தனது முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்பட 128 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், ஹாண்டுரஸ், குவெட்டேமாலா, பலுவா, நவுரு, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா, தோகோ ஆகிய 9 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. 35 நாடுகள் இந்த தீர்மானத்தில் வாக்களிக்கவில்லை. 

இந்நிலையில், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, “பாலஸ்தீனுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. காஷ்மீர் விவகாரம், தீவிரவாதம் உள்ளிட்ட விஷயங்களில் பாலஸ்தீனம் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தது இல்லை. இஸ்ரேலே நமக்கு உறுதுணையாக இருந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “மேற்கு ஜெருசலேம் இஸ்ரேலின் ஆளுகைக்கு உள்பட்ட பகுதி என ஐ.நா சபை ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், இந்தியா தனது தூதரகத்தை அங்கே ஏன் மாற்றக்கூடாது?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

“மேற்கு ஜெருசலேம் இஸ்ரேலுக்கானது, தூதரகம் அங்கே தான் அமைய வேண்டும். இந்தியா இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து மிகப்பெரிய தவறு செய்து விட்டது” என்று காரசாரமான கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News