செய்திகள்

குஜராத்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் தொடங்கியது

Published On 2017-08-08 03:55 GMT   |   Update On 2017-08-08 03:55 GMT
குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கிடையே இன்று தொடங்கியுள்ளது
காந்திநகர்:

குஜராத் மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு 3 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் குஜராத் சட்டசபையில் இன்று தொடங்கியது.

இதில் பா.ஜனதா சார்பில் அதன் தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, அண்மையில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேலும் போட்டியிடுகின்றனர்.

3 இடங்களுக்கு 4 பேர் போட்டியிடுவதால் குஜராத் அரசியலில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. குறிப்பாக அகமது பட்டேலை தோற்கடிக்க பா.ஜ.க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் தற்போதைய நிலையில் அமித்ஷா, ஸ்மிரிதி இரானி, அகமது பட்டேல் ஆகிய மூவரும் எளிதாக வெற்றி பெற்றுவிட முடியும். ஏனென்றால் பா.ஜ.க.வுக்கு 121 எம்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 51 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

அதேநேரம் சில வாரங்களுக்கு முன்பு குஜராத் மாநில காங்கிரசின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சங்கர்சிங் வகேலா அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். மேலும், அவருக்கு ஆதரவாக 6 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.க.வில் சேர்ந்தனர். இதனால் சட்டசபையின் மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 182-ல் இருந்து
176 ஆகவும் காங்கிரசின் பலம் 51 ஆகவும் குறைந்துபோனது.

இதையடுத்து, காங்கிரசின் 44 எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள ஈகிள்டன் என்ற சொகுசுவிடுதியில் 2 வாரம் தங்க வைக்கப்பட்டனர். என்றபோதிலும் அவர்களுடன் 7 எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரு
செல்லவில்லை. இவர்கள் வகேலாவின் ஆதரவாளர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இன்று நடைபெறும் எம்.பி.க்கள் தேர்தல் வாக்குச் சீட்டில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை தெரிவிப்பதற்காக ‘நோட்டா’ வசதியும் சேர்க்கப்பட்டு உள்ளது. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த தேர்தலில் 45 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் போதும் ஒருவர் எம்.பி.யாக வெற்றி பெற்று விடலாம். இதன்படி பார்த்தால் பா.ஜ.க.வுக்கு 121 எம்.எல்.ஏ.க்களில் 90 பேர் போக மீதம் 31 பேர் உள்ளனர்.

அதே நேரம் காங்கிரசுக்கு 44 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது. எனவே அகமது பட்டேல் வெற்றி பெற இன்னும் ஒரு எம்.எல்.ஏ.வின் ஓட்டு தேவை. ஆனால், பா.ஜ.க.வின் 3-வது வேட்பாளரான பல்வந்த்சிங் ராஜ்புத்துக்கு 31 ஓட்டுகளே கிடைக்கும். அவர் வெற்றி பெற இன்னும் 14 ஓட்டுகள் தேவைப்படுகிறது.

காங்கிரசின் கூட்டணியான தேசியவாத காங்கிரசுக்கு 2 எம்.எல்.ஏ.க்களும், ஐக்கிய ஜனதா தளம், குஜராத் பரிவர்த்தன் கட்சிக்கு தலா ஒரு எம்.எல்.ஏ.வும் உள்ளனர். இதில் தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் அகமது பட்டேல் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்தபோது உடன் இருந்தவர்கள் ஆவர். இதனால் இவர்கள் ஆதரவு காங்கிரசுக்கு கிடைக்கும் என்று கருதப்பட்டது.

தற்போது ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ. சோட்டுபாய் வசவா, “எனது தொகுதிக்கு ஏதாவது நன்மை செய்பவர்களுக்கே வாக்களிப்பேன்” என்று கூறி காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்திருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவரும் யாருக்கு ஓட்டுப்போடுவது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

இதனால், இன்று நடைபெறும் தேர்தலின் முடிவுகள் தேசிய அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை 4 மணி வரை எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை வளாகத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்துள்ளதாக மாநில தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News