செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மல்லையா ஆஜராகவில்லை: விசாரணை 14-ம் தேதி ஒத்திவைப்பு

Published On 2017-07-10 10:42 GMT   |   Update On 2017-07-10 10:42 GMT
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக விஜய் மல்லையா நேரில் ஆஜராகாததையடுத்து, வழக்கு விசாரணையை ஜூலை 14 ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் பெற்றிருந்தார். ஆனால், அவர் கடன் தொகையை கட்டவில்லை. இதையடுத்து, வங்கிகள் சார்பில் மல்லையா மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

இதற்கிடையே, விஜய் மல்லையா இந்தியாவிலிருந்து சென்று லண்டனில் வசித்து வருகிறார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், மல்லையா லண்டனில் இருந்ததால் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதுதொடர்பாக மத்திய அரசு, இங்கிலாந்து அரசிடம் மல்லையாவை நாடு கடத்தும்படி கோரிக்கை விடுத்தது.
 


இதற்கிடையே ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் சார்பில் விஜய் மல்லையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தண்டனை தொடர்பான வாதம் ஜூலை 10-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக மல்லையா நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், நீதிபதிகள் ஏ.கே.கோயல் மற்றும் யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மல்லையாவுக்கான தண்டனை தொடர்பான வாதம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மல்லையா ஆஜராகவில்லை. இதையடுத்து, வாதத்தை ஜூலை 14ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்தியா விடுத்த கோரிக்கை, பிரிட்டன் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News