செய்திகள்

ஐதராபாத்தில் ஜி.எஸ்.டி. அமலுக்கு முன்பே சினிமா கட்டணம் உயர்வு

Published On 2017-06-27 06:53 GMT   |   Update On 2017-06-27 06:53 GMT
ஐதராபாத்தில் ஜி.எஸ்.டி.வரி அமலுக்கு வருவதற்கு முன்பே சினிமா கட்டணத்தை ரூ.300 வரை உயர்த்துமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐதராபாத்:

நாடு முழுவதும் வருகிற 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வருகிறது. இதனால் சினிமா டிக்கெட் கட்டணம் உயருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் ஜி.எஸ்.டி.வரி அமலுக்கு வருவதற்கு முன்பே சினிமா கட்டணங்களை உயர்த்துமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ‘சிங்கிள் ஸ்கிரீன்’ எனப்படும் சாதாரண தியேட்டர்கள் முதல் மல்டிபிளக்ஸ் எனப்படும் காம்ப்ளக்ஸ் தியேட்டர்கள் வரை சினிமா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

‘கோல்டு டிக்கெட்ஸ்’ மற்றும் ராயல் வகுப்பு கட்டணம் ரூ.200-ல் இருந்து ரூ.300 ஆகவும் மற்ற வகுப்பு கட்டணங்கள் ரூ.150-ல் இருந்து ரூ.250 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

திரைக்கு முன்பாக இருக்கும் முதல் இரண்டு வரிசை இருக்கைகளுக்கு கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் குறைப்பு செய்யப்பட்டு உள்ளது.

நகராட்சிகளில் ஏ.சி.வசதி இல்லாத தியேட்டர்களில் சினிமா கட்டணம் ரூ.20, ரூ.60 எனவும், மாநகராட்சிகளில் உள்ள ஏ.சி. வசதி இல்லாத தியேட்டர்களில் ரூ.30, ரூ.80 எனவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

நகரங்களில் ஏ.சி. தியேட்டர்களில் கீழ்வகுப்பு கட்டணம் ரூ.30, உயர்வகுப்பு கட்டணம் ரூ.80 என உயர்த்தப்பட்டுள்ளது.


நகர பஞ்சாயத்து மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உயர்வகுப்பு கட்டணம் ரூ.70, கீழ்வகுப்பு கட்டணம் ரூ.30 எனவும், சாதாரண தியேட்டர்களில் ரூ.50, ரூ.20 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 23-ந்தேதியே இது தொடர்பான உத்தரவை தெலுங்கானா அரசு பிறப்பித்துள்ளது. இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து ஐதராபாத் உள்பட மாநிலத்தில் உள்ள தியேட்டர்களில் உடனடியாக கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

Tags:    

Similar News