தமிழ்நாடு

கேரளா அரசு புதிய அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்

Published On 2024-05-24 08:54 GMT   |   Update On 2024-05-24 08:54 GMT
  • அணை பாதுகாப்பாகவும், உறுதியாகவும் இருப்பதாக வல்லுநர்குழு தெரிவித்தும் கேரள அரசு அணை கட்ட முயற்சிக்கிறது.
  • கேரள அரசு நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முடியாது என்றாலும் கேரள அரசு தொடர்ந்து அணை கட்டப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியில் அ.தி.மு.க. சார்பில் மருத்துவ முகாமை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முல்லைப் பெரியாறு அணை நமக்கு ஜீவாதார உரிமை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட 5 மாவட்டங்களுக்கு முல்லைப் பெரியாறு தான் ஜீவாதார உரிமை. அந்த உரிமையை மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் 142 அடியை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்தி 2016-ல் உரிமையை மீட்டுக் கொடுத்தார். அதற்காக உரிமை மீட்பு மாநாடு கூட மதுரையில் நடைபெற்றது.

இன்றைக்கு கேரளா அரசு தொடர்ந்து நாங்கள் புதிய அணை கட்டுவோம், பெரியாறு அணையை இடிப்போம் என 2 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். பொதுச்செயலாளர் எடப்பாடி அதனை கண்டித்து இன்றைக்கு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

ஆளுகிற கட்சியில் இருக்கிற முதல்வர் இப்போதுதான் தூங்கி எழுந்து சிலந்தி அணையை கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று நமது உரிமையை பறிபோகக்கூடிய சூழ்நிலையில் கூட புலியாக பாய வேண்டிய நேரத்தில் பூனையாக பதுங்கிக் கொண்டு கூட்டணி தர்மத்திற்காகவும், தன்னுடைய குடும்பத் தொழிலுக்காகவும் தமிழகத்தின் ஜீவதாரத்தின் உரிமையை விட்டுக் கொடுப்பது நியாயம் தானா?

அணை பாதுகாப்பாகவும், உறுதியாகவும் இருப்பதாக வல்லுநர்குழு தெரிவித்தும் கேரள அரசு அணை கட்ட முயற்சிக்கிறது. தமிழக முதல்வர் இந்த விசயத்தில் மென்மை போக்கை கடைபிடிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவையும் மீறி கேரள அரசு அணை கட்ட முயற்சிப்பது கண்டனத்திற்குரியதாகும்.

கேரள அரசு நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முடியாது என்றாலும் கேரள அரசு தொடர்ந்து அணை கட்டப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. மேலும் மக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ பதிவினை சமூக வலைதளங்களில் பரப்பி முல்லைப் பெரியாறு அணையை இடிக்க முயற்சிக்கிறது. தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை விசயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டினால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஐந்து மாவட்ட விவசாயிகளை திரட்டி தேனி அல்லது மதுரையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News