தமிழ்நாடு செய்திகள்

அறிவாலயத்தின் தோல்வி பயத்தில் அரங்கேறும் அரசியல் நாடகம் - நாஞ்சில் சம்பத்

Published On 2026-02-28 14:40 IST   |   Update On 2026-02-28 14:40:00 IST
  • அதிருப்தியைச் சமாளிக்க முடியாமல் அறிவாலயம் இன்று திணறி வருகிறது.
  • இந்தக் கூட்டணி என்பது கொள்கையின் அடிப்படையில் உருவானது அல்ல

தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சி சம்பத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

"தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில், ஆளுங்கட்சியான திமுகவின் செயல்பாடுகள் அவர்களின் தன்னம்பிக்கையை விட, அடிமனதின் ஆழத்தில் இருக்கும் தோல்வி பயத்தையே அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்கள் மத்தியில் எழுந்துள்ள கடும் அதிருப்தியைச் சமாளிக்க முடியாமல் அறிவாலயம் இன்று திணறி வருகிறது. இந்த நிர்வாகத் தோல்விகளை மறைக்கவே, ஐம்பது கட்சிகளை வளைத்துப் பிடித்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்கி, தாங்கள் ஏதோ பலமாக இருப்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கப் பார்க்கிறார்கள்.

இந்தக் கூட்டணி என்பது கொள்கையின் அடிப்படையில் உருவானது அல்ல; இது முழுக்க முழுக்க ஒரு "கல்லாப்பெட்டி கூட்டணி". தங்களுக்குச் சாதகமாக அதிகாரத்தைப் பயன்படுத்தியும், தேர்தல் நேரத்து 'கவனிப்புகளை' முன்னிறுத்தியும் சிறு சிறு கட்சிகளைத் தங்கள் பக்கம் இழுப்பதிலேயே அறிவாலயம் குறியாக இருக்கிறது. மக்கள் செல்வாக்கு இல்லாத லெட்டர்-பேட் கட்சிகளைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, ஒரு பெரும் படையைத் திரட்டிவிட்டதாகக் மார்தட்டிக் கொள்வது, ஒரு பலவீனமான வீரன் கூட்டத்திற்குப் பின்னால் ஒளிந்து கொள்வதற்குச் சமமானது.

தனித்து நின்று களம் காணத் துணிவில்லாத திமுக, இப்போது கூட்டணிக் கட்சிகளின் தயவை நாடி நிற்பது அவர்களின் அரசியல் சரிவையே காட்டுகிறது. விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் வாரிசு அரசியலின் ஆதிக்கத்தால் மக்கள் அடைந்துள்ள சலிப்பை இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் மூலம் துடைத்துவிட முடியாது. எத்தனை கட்சிகள் கைகோர்த்தாலும், மக்கள் மன்றத்தில் அறிவாலயத்தின் "கல்லாப்பெட்டி அரசியல்" எடுபடாது. வரும் தேர்தலில் வாக்காளப் பெருமக்கள் இந்த அதிகாரப் பசி கொண்ட கூட்டணிக்குத் தகுந்த பாடம் புகட்டுவது உறுதி"

என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News